விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

தமிழக விவசாயிகளின் வங்கிக் கணக்கில்,ரூ.6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். 
கூத்தாநல்லூர் அடுத்த மூலங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்யும் அமைச்சர் இரா. காமராஜ்
கூத்தாநல்லூர் அடுத்த மூலங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்யும் அமைச்சர் இரா. காமராஜ்

தமிழக விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ.6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் மூலங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை உணவுத் துறை அமைச்சர் இரா . காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது, மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான கே.மணிவாசன், மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வில், நெல்களை கையில் எடுத்து ஈரமாக உள்ளதா, காய்ந்து உள்ளதா என அமைச்சர் சோதனை செய்தார். மூட்டைகள் நன்றாகத் தைக்கப்பட்டுள்ளதா எனவும் சோதனையிட்டார். 

அதைத் தொடர்ந்து, அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினமும் அனைத்து தரப்பு மக்களை பாதுக்காக்கின்ற ஆட்சியை நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஆய்வுகளின் மூலமும் மக்களின் அன்றாட பிரச்னைகளைக் கேட்டறிந்து அதன் மூலமும் மக்களின் தேவைகளைத் தெரிந்து சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லை, விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

டெல்டா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயம்தான் முதன்மை தொழிலாகும். குறுவை சாகுபடி எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மிகச் சிறப்பாக விளைச்சல் கண்டுள்ளது. டெல்டா வரலாற்றிலேயே கடந்த ஆண்டு காரிப் பருவத்தில் 32,41,000 நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், டெல்டா பகுதியிலுள்ள 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய பணத்தையும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.6,130 கோடி ஆகும். அதே போல், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த காரீப் பருவத்தில் 2 ,85,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பருவம் தொடங்கிய 22 நாட்களிலேயே 72 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பாகும்.

மேலும், திருவாரூர்  மாவட்டத்தில் 249 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 93,727 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,428 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு உரிய ரூ.171 கோடியே 60 லட்சத்தை, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 93 சதவீத அறுவடை முடிவு பெற்றுள்ளது.

விவசாயிகள் பாதிக்காத வகையிலும், பொது மக்களுக்கு வழங்கும் பொது விநியோகமும் எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு முதல்வர், அதற்கு தகுந்தவாறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், வாணிபக் கழக பொது மேலாளர் காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, துணை மேலாளர் கான்டீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com