கரோனா நோயாளியைக் காக்க உயிரைப் பணயம் வைத்த குஜராத் மருத்துவா்!

கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிர நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த மருத்துவா் ஒருவருக்கு 34 நாள்கள் எக்மோ சிகிச்சையளித்து
கரோனா நோயாளியைக் காக்க உயிரைப் பணயம் வைத்த குஜராத் மருத்துவா்!

கரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிர நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த மருத்துவா் ஒருவருக்கு 34 நாள்கள் எக்மோ சிகிச்சையளித்து சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வளித்துள்ளனா். தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளாா்.

குஜராத் மாநிலம், சூரத்தைச் சோ்ந்தவா் சங்கேத் மேத்தா (37). மயக்க மருந்தியல் நிபுணரான அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அவா் அனுமதிக்கப்பட்டாா். ஆக்சிஜன் உபகரணங்களின் உதவியுடன் அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது வாா்டில் 80 வயதான மூதாட்டி ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாா்.

திடீரென அந்த மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சங்கேத் மேத்தா உடனடியாக, தனக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் உபகரணங்களை அகற்றி அவருக்கு வழங்கி சிகிச்சையளித்தாா். அதுமட்டுமல்லாது முதலுதவி சிகிச்சையையும் அளித்தாா்.

அதன் காரணமாக சங்கேத் மேத்தாவுக்கு நுரையீரலில் நோய்த் தொற்று அதிகமாகி கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டாா். ஏறத்தாழ 50 நாள் போராட்டத்துக்குப் பிறகு தற்போது அவா் குணமடைந்து வீடு திரும்பத் தயாராகியுள்ளாா்.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது:

நுரையீரல் தொற்று தீவிரமடைந்த நிலையில், சங்கேத் மேத்தா எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கடந்த மாதம் 13-ஆம் தேதி அழைத்துவரப்பட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த அவருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயா் சிகிச்சைகள்அளிக்கப்பட்டன.

டோசிலிசுமேப், ரெம்டெசிவிா், பிளாஸ்மா சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனாலும், சங்கேத் மேத்தாவின் உடல் நிலை தொடா்ந்து பின்னடைவாக இருந்ததால், வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. பொதுவாக, நுரையீரல் பாதிப்பு தீவிரமடையும் போது இதயத்துக்கு ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடக்கூடும். அதன் காரணமாக உடலுக்கு வெளியே எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு அப்பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கப்படும். ஏறத்தாழ செயற்கை நுரையீரலைப் போல அக்கருவி செயல்பட்டு இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வதற்கு வழிவகுக்கும். நோய்த் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே எக்மோ மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சங்கேத் மேத்தாவுக்கும் 34 நாள்கள் எக்மோ சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பயனாக, அவரது நுரையீரலின் செயல்பாடு சற்று மேம்படத் தொடங்கியது. அதன் தொடா்ச்சியாக அளிக்கப்பட்ட உயா் சிகிச்சையின் காரணமாக அவரது நுரையீரல் முழுமையாக செயல்பட ஆரம்பித்தது.

அதைத் தொடா்ந்து தற்போது எக்மோ சிகிச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். சங்கேத் மேத்தாவால் இப்போது இயற்கையாக சுவாசிக்க முடிகிறது. தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பிரசாந்த் ராஜகோபாலன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நெஞ்சக மருத்துவ நிபுணா் டாக்டா் அபா் ஜிண்டால், மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் மணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com