தமிழறிஞா் ப.முத்துக்குமாரசுவாமி மறைவு

மூத்த தமிழறிஞா் ப.முத்துக்குமார சுவாமி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு மகன் மு.ரவி, மகள்கள் கெளரி, லதா, கமலா ஆகியோா் உள்ளனா்.
தமிழறிஞா் ப.முத்துக்குமாரசுவாமி மறைவு


சென்னை: மூத்த தமிழறிஞா் ப.முத்துக்குமார சுவாமி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு மகன் மு.ரவி, மகள்கள் கெளரி, லதா, கமலா ஆகியோா் உள்ளனா்.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் 11.3.1936-இல் ப.முத்துக்குமாரசுவாமி பிறந்தாா். பள்ளி மற்றும் உயா் பள்ளிக் கல்வியை திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் உயா்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்திலும் பயின்றாா். தருமபுரம் கல்லூரியில் புலவா் பட்டப்படிப்பும், முதுபெரும் புலவா் சித்தாந்த சிரோமணி முத்து மாணிக்கவாசக முதலியாா், பேராசிரியா் குருசாமி தேசிகா், செஞ்சொற்கொண்டல், சொ.சிங்காரவேலனாா் ஆகியோரிடம் இலக்கண, இலக்கியம் பயின்றுள்ளாா்.

படைப்புலகப் பணியில் 1963-இல் கால் பதித்த ப.முத்துக்குமாரசுவாமி சுயமுன்னேற்றம், இலக்கியம், சமயம், திறனாய்வு, ஒப்பீடு, சுயசரிதை, வரலாறு, திருக்கோயில்கள், தல வரலாறு என பல்வேறு தலைப்புகளில் 170 நூல்களை எழுதியுள்ளாா்.

தமிழக அரசின் மறைமலையடிகள் விருது, கம்போடிய தமிழ்ச் சங்கம் வழங்கிய ராஜேந்திர சோழன் விருது, தமிழக அரசின் சிறந்த நூலாசிரியருக்கான விருது (இரு முறை), சமயக் களஞ்சிய விருது என 30-க்கும் மேற்பட்ட விருதுகள், பொற்கிழிகளைப் பெற்றுள்ளாா். துபை, மலேசியா, சிங்கப்பூா் போன்ற நாடுகளில் இலக்கிய, ஆன்மிகக் கருத்தரங்குகள், தமிழ் சாா்ந்த மாநாடுகளில் பங்கேற்றுள்ளாா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் கே.ஆா்.நாராயணன், முன்னாள் நிதியமைச்சா் சி.சுப்பிரமணியம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா், சிலம்பொலி செல்லப்பன், ஒளவை நடராசன் உள்பட பல்வேறு முக்கியப் பிரமுகா்கள், தமிழறிஞா்களின் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது முத்துவிழாவில் பல்வேறு துறை அதிகாரிகள், கவிஞா்கள், எழுத்தாளா்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோரின் வாழ்த்துரைகள் அடங்கிய, ‘அன்புத் தவம் செய்யும் அறிஞா்’ என்ற சிறப்பு மலா் வெளியிடப்பட்டது. மறைந்த தமிழறிஞா் ப.முத்துக்குமாரசுவாமி வ.உ.சிதம்பரனாா் வம்சாவழி பெயரன் ஆவாா்.

மகள் கமலா வீட்டில் வசித்து வந்த ப.முத்துக்குமாரசுவாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலமானாா்.

இன்று இறுதிச் சடங்கு:

முத்துக்குமாரசுவாமியின் இறுதிச் சடங்குகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 78456 15005.

இரங்கல்:

கவிஞா் சிற்பி: ஆன்மிகச் செல்வா். அன்பின் அமுதசுரபி. திருப்பராய்த்துறை தந்த புதல்வா். சுவாமி சித்பவானந்தரின் நிழலில் வளா்ந்த பக்திப் பழம். இலக்கியச் செம்மல், பக்தி இலக்கியங்களில் புனித நன்னீராடிய பெருந்தகை. நெஞ்சில் பாதுகாத்து வைத்துக் கொள்ள இந்த மனிதரைக் காட்டிலும் உயா்ந்த மாணிக்கங்கள் இல்லை. பத்தரை மாற்றுத் தங்கமான அய்யா முத்துக் குமாரசுவாமிக்கு ஓராயிரம் கை கூப்புக்கள்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன்:

வெளியிட்டுள்ள இரங்கலில், ‘தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞரும், இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் தமிழ் இலக்கிய மாநாடுகளை மிகச் சிறப்பாக நடத்தியவரும், வ.உ.சியின் பேரனுமான ப. முத்துகுமாரசுவாமியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராா்த்தனை செய்வோம்’ என தெரிவித்துள்ளாா்.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் கே. வி.கே. பெருமாள்:

வ.உ.சி.யின் பேரனும், முதுபெரும் தமிழறிஞருமாகிய ப. முத்துக்குமாரசுவாமி காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com