அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவை நனவாக்குவோம்: முதல்வர் 

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணர்வை மதித்துத்தான் நாங்கள் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவை நனவாக்குவோம்: முதல்வர்
அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவை நனவாக்குவோம்: முதல்வர்


நான்கூட அரசுப் பள்ளியிலே படித்த மாணவன்தான். ஆகவே, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணர்வை மதித்துத்தான் நாங்கள் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குரு பூஜையும் இன்று நடைபெறுகிறது. 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908-ஆம் ஆண்டு தேவர் திருமகனார் அவர்கள் பிறந்தார். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து இளைஞர்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகச் செம்மல். 1920-ஆம் ஆண்டில் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்த குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் திருமகனார் அவர்கள் மேற்கொண்ட போராட்டம் மிக மிக முக்கியமான போராட்டமாக அன்றையதினம் விளங்கியது. 

1937-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில், தேவர் திருமகனார் அவர்கள் இராமநாதபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு ஆங்கிலேய அரசால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர் அவர்களை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றவர். அதைத் தொடர்ந்து 1946-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலிலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர் 1948-ஆம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சியினுடைய தமிழ்நாட்டின் தலைவரானார். 1937 முதல் 1962 வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். மேலும் 1952, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.

ஆன்மிகத்தில் தேவர் திருமகனார் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானமும் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவும் தேவர் திருமகனார், தெய்வத் திருமகனார் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

அவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல், அவர் 20,075 நாள்கள் வாழ்ந்தார். சிறையிலிருந்த நாட்கள் 4,000. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தேவர் திருமகனார் பிறந்த தினமான அக்டோபர் 30-ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 1979-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆண்டுதோறும், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1994-ஆம் ஆண்டு சென்னை, நயதனத்தில் தேவர் திருமகனாருக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலையை அமைத்து திறந்து வைத்ததோடு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தை புனரமைத்திட ஆணையிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நினைவகம் புதுப்பொலிவுடன் இன்றைக்கு திகழ்கின்றது.

அதிமுக சார்பாக தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ஆம் ஆண்டு அறிவித்து அதன்படி 9.2.2014 அன்று ஜெயலலிதா, பசும்பொன் கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து, 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தினை தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் திருமகனாருக்கு அரசு விழா, சென்னை, நந்தனத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பசும்பொன் நினைவிடத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் என தேவர் திருமகனாருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அதிமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

கேள்வி : தேவர் அவர்களுடைய குருநாதரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை தேச பக்த தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?

பதில் : சுபாஷ் சந்திர போஸ் அவர்களைப் பற்றி சொன்னார்கள், அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கேள்வி: இம்மாவட்டத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதா?
பதில் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதே 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதுவும் தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அவர் அறிவித்து பல தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வழியில் வந்த அரசு, 2019-ஆம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பெரும்பாலான தொழில்கள், இதுபோன்ற பின்தங்கிய மாவட்டங்களில் துவங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணி குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணி குறித்தும் இம்மாவட்டத்திற்கு வருகை தந்தபோது தெரிவித்தேன். இந்த மாவட்டம், வளமாக, செழிப்பாக இருப்பதற்கு காவேரி-குண்டாறு என்ற மிகப் பெரிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தேன். இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தான் அதிக ஏரிகள் இருக்கிறது. இந்த அற்புதமான திட்டத்தையெல்லாம் இந்த மக்களுக்கு வழங்குகின்ற அரசு தமிழக அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்று, மீனவர் பாதுகாப்பு மண்டலமாக அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில் : இது வேறு, அது வேறு இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வேளாண் மண்டலப் பகுதிகளில் தான் மீத்தேன், ஈத்தேன் போன்றவை எடுத்தார்கள் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, அங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால், அந்தப் பகுதிகளெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தைக் குறைப்பதற்கு ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன, தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசுதான், அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் அதிமுக அரசுதான். ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு கூட மீனவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மானியம் வழங்கப்பட்டு, படகுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி பல வகைகளிலும் மீனவ சமுதாய மக்களுக்கு அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது.

கேள்வி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை ...
பதில் : தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக, சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்பட்டதால், அரசு அரசாணை வெளியிட்டது. இந்த ஆண்டே நடைபெறுவதற்குத் தான் இவ்வளவு முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் இருப்பவர்கள், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் தான். எனவே, அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் மருத்துவக் படிப்பு படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவை நனவாக்கும் எண்ணத்தில்தான் இதை நிறைவேற்றினோம். நான்கூட அரசுப் பள்ளியிலே படித்த மாணவன்தான். ஆகவே, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணர்வை மதித்துத்தான் நாங்கள் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை, எளிய மாணவர்களும் சரிசமமாக மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் நாங்கள் இதைக் கொண்டு வந்தோம். இதற்கு யாரும் கோரிக்கை வைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை, எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், அதிமுக அரசு, கிராமத்திலிருந்து நகரம் வரை அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்கவேண்டுமென்பதற்காகத் தான், இந்த சட்டமுன்வடிவைக் கொண்டு வந்தோம் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com