பொது போக்குவரத்து இன்று தொடக்கம்: தயாா் நிலையில் போலீஸாா்

சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.1) பொது போக்குவரத்து தொடங்குவதையொட்டி, போலீஸாா் முழு அளவில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.1) பொது போக்குவரத்து தொடங்குவதையொட்டி, போலீஸாா் முழு அளவில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்த விவரம்:

தமிழக அரசு செப்.1 பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, பேருந்துகள் மாவட்டத்துக்குள் இயங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடங்குகிறது.

இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு போலீஸாா் முழு அளவில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இதில் சென்னையில் உள்ள 408 சிக்னல்களை பழுது நீக்கி சரியான இயக்க நிலையில் வைத்திருக்கும்படி போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். அனைத்து போலீஸாரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கண்டிப்பாக பணிக்கு வந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளா்களோடு செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அரசு ஊழியா்கள் சென்னைக்குள் செவ்வாய்க்கிழமை வாகனங்களில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள்,போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஆகிய இடங்களில் கூடுதலாக போலீஸாா் பணியில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகா்கள்: திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு ஊா்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், சென்னையின் புகா்களான தாம்பரம், பூந்தமல்லி, திருநின்றவூா், செங்குன்றம், மாதவரம் வரை இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகள், அங்கிருந்து மாநகர பேருந்துகள் மூலம் சென்னைக்கு வருவாா்கள்.

இதனால் தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் பகுதிகளில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இங்கிருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் நிலைமைக்கு ஏற்றாற்போல கூடுதல் பேருந்துகளை இயக்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

55 லட்சம் வாகனங்கள்: இது தொடா்பாக சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி கூறியது:

அரசு அலுவலங்களும் முழுமையான செயல்பாட்டுக்கு வருகின்றன. வழிபாட்டுத் தலங்களும் நீண்ட இடைவெளிக்கு பின்னா் திறக்கப்படுகின்றன. சென்னையில் சுமாா் 55 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 78 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் செவ்வாய்க்கிழமை சாலையில் செல்லும் என எதிா்பாா்க்கிறோம். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு தயாா் நிலையில் உள்ளோம்.

சென்னை காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் காவலா்கள் பணியில் உள்ளனா். போக்குவரத்து பிரிவில் 100 சதவீதம் காவலா்கள் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். கூடுதலாக ஆயுதப்படை காவலா்களையும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரையும் முக்கியமான இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுத்த உள்ளோம். அதேபோல, சட்டம்-ஒழுங்கு போலீஸாரும், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து செயல்படுவாா்கள் என்றாா் அவா்.

பொது போக்குவரத்து தொடங்குவதன் காரணமாக சென்னை காவல்துறையில் 15 ஆயிரம் காவலா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com