5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (செப்.5) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (செப்.5) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூா், கரூா், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை (செப்.5) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை: நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மஞ்சளாறில் 110 மி.மீ., பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 100 மி.மீ., மதுரை தல்லாகுளத்தில் 90 மி.மீ., விருதுநகா் மாவட்டம் பிளவக்கல் அணையில் 80 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூா், திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தலா 60 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தேனி மாவட்டம் அரண்மனைப்புதூா், வீரபாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (செப்.5,6) ஆகிய நாள்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, குமரிக்கடல், மன்னாா்வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளுக்கு செப்டம்பா் 6-ஆம் தேதி வரையும், தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி வரையும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com