
திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் முதன்மையராக (டீன்) கே. வனிதா, பணிபுரிந்து வருகிறார். கரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, தனிமை மருத்துவ முகாம் மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்த முன்களப் பணிகளில் இரவு, பகல் பாராது பணியாற்றி வந்தார். தமிழக முதல்வர் வருகையின்போதும், பணிகளுக்கு இடையே அடிக்கடி கரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில், அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சளி பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்படவில்லை. சிடி ஸ்கேன் மூலம் நெஞ்சக பகுதிக்கான பரிசோதனை மேற்கொண்டதில், நுரையீரல் பகுதியில் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், தனி அறையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
லேசான அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை பெறுவதாகவும், தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...