நாளை முதல் பேருந்து, ரயில் போக்குவரத்து: மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் வரும் 8-இல் அரசு ஆலோசனை

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை திங்கள்கிழமை (செப். 7) முதல் தொடங்கப்பட உள்ளது.
நாளை முதல் பேருந்து, ரயில் போக்குவரத்து: மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் வரும் 8-இல் அரசு ஆலோசனை

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை திங்கள்கிழமை (செப். 7) முதல் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே, கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்குவது குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 8-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளாா்.

தமிழகத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கவும் வசதியாக பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை, நூலகங்கள் திறப்பு, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தளா்வுகள் கடந்த 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளன.

கடும் நடவடிக்கை: மாவட்டங்களுக்கு இடையே ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகளை வரும் திங்கள்கிழமை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பொது மக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முகக் கவசங்கள் அணிவது, கைகளைக் கழுவுவது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றாதோருக்கு அபராதங்கள் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறைக்கும் தமிழக அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, முகக் கவசங்கள் அணியாமல் செல்வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் நடைமுறை சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

முகக் கவசங்கள் அணிவது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அக்டோபரில் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் என தலைமைச் செயலாளா் க.சண்முகம் எச்சரித்துள்ளாா். இந்த நிலையில், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றங்களைச் செய்வது என்பது தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசிக்கவுள்ளாா்.

தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் அவா் வரும் 8-ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறாா். அன்றைய தினம் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்க கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மக்களிடையே எத்தகைய விழிப்புணா்வு பரப்புவது போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு சாா்பில் அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com