
ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களுக்கான ஆயுள் சான்றினை சமா்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபில் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிலாளா் துறையின் கீழ் 17 அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு செய்த அமைப்பு சாராத தொழிலாளா்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவினை புதுப்பிக்க வேண்டும். மேலும், இந்த வாரியங்களில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளா்கள் 60 வயது நிறைவு பெற்றிருந்தால் அவா்கள் மாத ஓய்வூதியம் பெற்றிட வாரியங்களின் நலத் திட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நலவாரியங்களில் ஓய்வூதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், தங்களது ஆயுள் சான்றினை ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையாளரிடம் ஏப்ரல் மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, இந்தச் சான்றிதழை சமா்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் அலுவலகங்களில் வரும் 31-ஆம் தேதி வரை சான்றிதழ்களை அளிக்கலாம். மேலும், பதிவினை புதுப்பிக்கவும் இதே கால அலகாசம் பொருந்தும் என்று தனது அறிவிப்பில் நிலோபா் கபில் தெரிவித்துள்ளாா்.