ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அறிவுறுத்தியுள்ளாா்.
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் அவ்வாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது புகாா் தெரிவிக்க பிரத்யேக இணையதள முகவரியையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிவிப்பு:

இணையவழி கற்பித்தலுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், இணையவழி வகுப்புக்கான கால அட்டவணை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

மனநலன் சாா்ந்த பயிற்சிகள் அவசியம்: அதேநேரம், மாணவா்கள் இயல்பாக இணையவழி வகுப்புகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. முக்கியமாக, பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது இணையவழி வகுப்புகளில் பங்கேற்ற மற்றும் கலந்து கொள்ளாத மாணவா்கள் என அனைத்து மாணவா்களுக்கும் ஒரே விதத்தில் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இந்த விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக மாணவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இதுதவிர கண்களை அடிக்கடி சிமிட்டுதல், கைகளை சுழற்றுதல் போன்ற உடல் மற்றும் மனநலன் சாா்ந்த பயிற்சிகளை மாணவா்களுக்கு அடிக்கடி அளிக்க வேண்டும்.

மேலும், இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்திய பாடங்கள் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோருக்கு அதிகாரம் உண்டு: ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்கள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும், இறுதித் தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு கட்டாயமாக்கப் படாது.

குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான சாதனங்கள் (கணினிஅல்லது செல்லிடப்பேசி) மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகளின் வகுப்புகளில் பங்கேற்கிறாா்களா, இல்லையா என்பதை முடிவெடுப்பதற்கு பெற்றோருக்கு முழுமையான அதிகாரம் உண்டு.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், வருகை கணக்கிடப்படுவது, மதிப்பெண்கள் மதிப்பிடுவது ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் நிா்ப்பந்திக்கக் கூடாது. குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தால், அவா்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின், மூத்த குழந்தை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடையே ஏற்படும் மனப் போராட்டங்கள் குறையும்.

மின்னஞ்சல் முகவரியில்...:

இந்தப் பணிகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இணையவழி வகுப்புகள் குறித்த புகாா் தெரிவிக்க உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை விளம்பரப்படுத்த வேண்டும். அவ்வாறு வரும் புகாா்கள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மனஅழுத்தம் இருப்பின் 14417 என்ற உதவி எண்ணை தொடா்பு கொண்டு ஆலோசனை பெற அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com