தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் குறைவாக இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரிப்பு
தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரிப்பு


திருவண்ணாமலை: தமிழகத்தில் கரோனாவில் இருந்து நலமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் குறைவாக இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை: திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரதானத் தொழிலாக இருக்கக்கூடிய வேளாண் தொழிலில் சுமார் 60 சதவிகித மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நெல் உற்பத்தியாகக்கூடிய மாவட்டமாக இருப்பதால் அரிசிக்கு பெயர் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். இந்த அரிசிக்கு தமிழகத்தில் தனிச்சிறப்பு உண்டு. அத்தகைய உற்பத்தியை செய்கின்ற வேளாண் பெருமக்களை வணங்குகிறேன். மேலும், இது கைத்தறி நெசவு செய்யும் நெசவாளர்கள் நிறைந்த பகுதி. பட்டுத் தொழிலில் சிறந்து விளங்கக்கூடிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஆரணிப் பட்டுக்கு தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதும் தனி அந்தஸ்து இருக்கிறது. இந்தப் பட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும், இயற்கை சூழ்ந்த ஜவ்வாது மலையில், அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மலைவாழ் மக்களுக்கு  அரசு ஏராளமான திட்டங்களை வாரி, வழங்கிக் கொண்டிருக்கிறது. மலைவாழ் மக்களின் குழந்தைகள் சிறந்த கல்வி கற்கக்கூடிய வகையில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி உருவாக்கியதுடன், அவர்கள் உயர்கல்வி பயில பல இடங்களில் ஐடிஐ-க்களும் திறக்கப்பட்டுள்ளன. மலைவாழ் மக்கள், வேளாண் தொழிலிலும் சிறந்து விளங்கி, தமிழக மக்கள் விரும்பி உண்ணும் சிறுதானியங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறார்கள். ஜவ்வாது மலைப்பகுதியின் சுவையான தேன் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜவ்வாது மலையில், மலைவாழ் மக்களை போற்றும் வகையிலும், அவர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலும் கோடை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இம்மாவட்டத்தில் நாமக்கட்டி தயாரிக்கும் மூலப்பொருள் கிடைப்பதால் 130 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் நாமக்கட்டிகள், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல், திருப்பதி வரை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு பெருமை சேர்க்கும்விதமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் கிரிவலப் பாதையில் வலம் வருவதற்கு சரியான சாலை வசதி இல்லாததை அறிந்து, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கிரிவலப் பாதையில் நடைபாதை, ஓய்வறை, கழிப்பறை, குடிநீர் வசதி, நிழற்கூடம், கிரிவலப் பாதையில் தவறுகள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளைக் கொண்ட சிறந்த சாலையாக வடிவமைக்க அறிவுறுத்தி, நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் சுமார் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிரிவலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ் கட்டும் பணியும் நிறைவுபெற இருக்கிறது. இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் தமிழக அரசால் வாரி, வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரம்ப காலக்கட்டத்தில் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அதிகரித்ததை, படிப்படியாகக் குறைக்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதற்கு சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையும் துணை நிற்கின்றன. இது எளிதாகப் பரவக் கூடியது என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறேன். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடித்து, குணமடைய செய்யக்கூடிய சூழ்நிலை இல்லாத நிலையில், இந்த நோயின் தன்மை மற்றும் வீரியத்தை அறிந்து பொதுமக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே, ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறக்கூடியவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களை குணப்படுத்துவது கடினமாக உள்ளது. நேரடியாக கொரோனா வைரசால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை மிக, மிகக் குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் கவனமாக பார்த்துக் கொண்டால்தான் இந்த நோய்த் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாத்து கொள்ள முடியுமென்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழ்நிலையில், மருத்துவர்களின் தனித்திறமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைய செய்யக்கூடிய நிலையை காண முடிகிறது.

இன்றைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்புகின்ற சூழ்நிலையை தமிழகத்தில் நாம் பார்க்கின்றோம். அரசு, சரியான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினால் இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. எல்லா மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அந்த காய்ச்சல் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்ல, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நோய்ப் பரவல் ஏற்படும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி போன்றவை இருக்கின்றதா அல்லது உடல் சோர்வு தொடர்ந்து இருக்கின்றதா என்பதைக் கேட்டறிந்து, அந்த தகவல்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுபோன்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால், கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக போதுமான மருத்துவமனைகளை உருவாக்கி, போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேண்டுமென்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக மருத்துவர்கள் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள், அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதிகமாக மக்கள் வசிக்கின்ற காலனி போன்ற பகுதிகளில் தலைவலி, காய்ச்சல் போன்றவை வரும்பொழுது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, ஒரு சிறப்பு திட்டமாக மினி கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று நேற்றையதினம் அறிவித்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் இருப்பர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டால் கூட, அதற்கு சிகிச்சை பெற சிரமமாக உள்ளது. இந்த குறைகளை போக்க வேண்டுமென்பதற்காக, தமிழக அரசு, இந்த மினி கிளினிக்குகளை உருவாக்க இருக்கிறது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தடுப்பணைகளை கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஷட்டரை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக, பொதுப்பணித் துறையின் சார்பாகவும், ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாகவும், பல ஏரிகள் தூர் வாரப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், மழைக் காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து, வேளாண் பெருமக்களுக்கும், குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கும். குடிமராமத்துத் திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் கண்ணுங்கருத்துமாக இருந்து இப்பணிகளை மேற்கொள்கின்ற போது, அந்தப் பணிகள் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும். இத்திட்டத்தினால், ஏரிகள் ஆழமாவதுடன், ஏரிகளிலிருந்து அள்ளப்படுகின்ற வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது.

இதன்மூலம் விளைச்சல் அதிகமாகிறது. அங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நலம் பயக்கும். இதுபோன்ற அரசின் நல்ல திட்டங்களினால், வேளாண் பெருமக்கள், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நெல் விளைச்சலை பெற்றிருக்கிறார்கள். வேளாண் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பயிர்க்கடன் வழங்கிய காரணத்தினால், அதிக நிலப்பரப்பில் வேளாண் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேலாக கூடுதல் பரப்பில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்த காரணங்களால், வேளாண் பெருமக்களுக்கு கூடுதலான வருமானமும் கிடைத்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பல பாலங்கள் மற்றும் ரயில்வே கடவுகளின் குறுக்கே பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். பொதுமக்கள் அரசை நாடி செல்வதற்குப் பதிலாக, அரசாங்கமே பொதுமக்களை நாடி சென்று அவர்களது கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம் என்ற திட்டத்தை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டேன். இந்த திட்டத்தின் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 46,840 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டதில், சுமார் 35,050 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. பட்டா மாறுதல் வேண்டி பெறப்பட்ட 11,451 மனுக்களில், 9,381 மனுக்களுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வேண்டுமென்று 13,808 உழைக்கும் திறனற்ற முதியோர் விண்ணப்பித்ததில், தகுதி வாய்ந்த 12,284 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுப்பணித் துறையின் மூலம் இந்த மாவட்டத்தில் பல திட்டங்கள் முடிக்கப்பட்டு இருக்கின்றன, சில திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. நெடுஞ்சாலைத் துறையின் மூலமாகவும் பல திட்டங்கள் முடிக்கப்பட்டிருக்கின்றன, சில திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆரணி புறவழிச்சாலை, திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ஆகிய பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக, பசுமை வீடுகள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பல வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஜல்ஜீவன் மிஷன் மூலமாக கிராமப்புறத்தில் இருக்கின்ற மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை நகரத்தில் புதிய பேருந்து நிலையம் தனியார் பங்களிப்போடு கட்டுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகமான கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கியது தமிழக அரசு. இந்த மாவட்டத்திலுள்ள 17,142 குழுக்களிலுள்ள 2,57,130 உறுப்பினர்கள் பயன்பெறக்கூடிய சூழ்நிலையை  அரசு உருவாக்கித் தந்துள்ளது. அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில் 8368 மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க ரூபாய் 20.92 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஐவ்வாது மலையில் தனி வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாண்புமிகு அம்மாவின் அரசு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அதிகளவு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தந்திருக்கிறது, நுண்ணீர் பாசத் திட்டத்திற்கு உதவிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறு பல திட்டங்கள் அம்மாவின் அரசால் இந்த மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com