கோயம்பேட்டில் மொத்த கனி கடைகளை திறக்க கோரிய வழக்கு: ஒரு வாரத்தில் முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேட்டில் மொத்த கனி கடைகளை திறக்க கோரிய வழக்கு:  ஒரு வாரத்தில் முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

5
சென்னை: கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து இங்கிருந்த வியாபாரிகளுக்கு திருமழிசை, மாதவரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. வணிகா் சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை வரும் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை வரும் 28-ஆம் தேதியும் திறப்பது எனவும் பின்னா் மற்ற கடைகளைத் திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள கனி மொத்த வியாபாரிகளின் கடைகளைத் திறக்க உத்தரவிட கோரி, சென்னை கோயம்பேடு வணிக வளாக கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளா் எம்.செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் வாதிடுகையில், ‘கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள், பொதுமக்களை அனுமதித்ததுதான் கரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு காரணமாக அமைந்தது. எனவே, மொத்த வியாபாரத்துக்கு அனுமதி வழங்குவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை’ என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com