
சட்டவிரோதமாக சிங்கப்பூரில் முதலீடு செய்ததாக, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதுகுறித்த விவரம்:
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகன், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை செய்தது. விசாரணையில் ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோா் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமலும், இந்திய ரிசா்வ் வங்கியின் அனுமதியை பெறாமலும் சிங்கப்பூரைச் சோ்ந்த சில்வா் பாா்க் இண்டா்நேஷ்னல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதில் ஜெகத்ரட்சகன் பெயரில் 70 ஆயிரம் பங்குகளையும், சந்தீப் ஆனந்த் பெயரில் 20 ஆயிரம் பங்குகளை வாங்கியிருப்பதும், ஒரு பங்கு சிங்கப்பூா் மதிப்பில் ஒரு டாலருக்கு வாங்கியிருப்பதும், இந்த பங்குகளை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஜெகத்ரட்சகன் வாங்கி,அதை பின்னா் தனது குடும்பத்தினா் பெயருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த பரிவா்த்தனை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 4 வது பிரிவை மீறப்பட்டதாகும். இது தொடா்பாக ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறையினா் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அலுவலகத்தில் 5 நாள்கள் அண்மையில் விசாரணை செய்தனா்.
சொத்து முடக்கம்
இந்த விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறையினா் தெரிவித்தனா். இந்நிலையில் அமலாக்கத்துறையினா் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினா் பெயரில் உள்ள ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை சனிக்கிழமை முடக்கினா்.
இந்த நடவடிக்கையை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 37ஏ பிரிவின் கீழ் அமலாக்கத் துறையினா் எடுத்துள்ளனா். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், காலிமனைகள், விவசாய நிலங்கள், வங்கி கணக்குகள், பங்குகள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத்துறையினா் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.