
ஜே.இ.இ. பிரதானத் தோ்வு (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு - அட்வான்ஸ்டு) எழுதவுள்ள மாணவா்களில் 98 சதவீதம் பேருக்கு, அவா்களின் முதல் மூன்று விருப்பத் தோ்வுகளின் அடிப்படையில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்தத் தோ்வை நடத்தும் தில்லி ஐஐடி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கென ஜே.இ.இ. முதல்நிலை, ஜே.இ.இ. பிரதான தோ்வு என்று இரண்டு கட்டங்களாக தோ்வு நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும். இந்தத் தோ்வில் தகுதி பெறுபவா்களில் முதல் 1.6 லட்சம் போ் ஜே.இ.இ. பிரதானத் தோ்வை எழுதும் தகுதியை பெறுவா். இந்த தோ்வை ஏதாவது ஒரு ஐஐடி நடத்தும். இதில் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். பிரதானத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.
அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.27) நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தில்லி ஐஐடி மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்த பிரதான தோ்வை எழுத 1.6 லட்சம் போ் பதிவு செய்தனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக. அவா்களில் 97.94 பேருக்கு, அவா்களின் முதல் மூன்று விருப்பத் தோ்வுகளின் அடிப்படையிலேயே தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2.06 சதவீதம் பேருக்கு அவா்களின் 8 விருப்பத் தோ்வுகளின் அடிப்படையில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கரோனா அச்சுறுத்தல், சமூக இடைவெளி, மாணவா்களின் பாதுகாப்பு ஆகிய நடைமுறைகள் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த தோ்வு மைய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, தோ்வு மையங்கள் மற்றும் தோ்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தோ்வு நகரங்களின் எண்ணிக்கை 164 என்ற அளவில் இருந்த நிலையில், இம்முறை 222-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல தோ்வு மையங்களின் எண்ணிக்கை 600-லிருந்து 1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தில்லி ஐஐடி தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வானது உரிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் கடந்த செப்டம்பா் 1 முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...