
அவிநாசி: சேவூர் அருகே பந்தம்பாளைத்தில் தேர்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 2051 மதுபாட்டிகளை தேர்தல் கூடுதல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியும் மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மதுபானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்கவும், வாக்காளர்களுக்கு மதுபாட்டில்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும், தேர்தல் பறக்கும் படை, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேவூர் அருகே பந்தம்பாளையத்தில் தேர்தல் நாளன்று விநியோகம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு ரதகசியத் தகவல் கிடைந்துள்ளது.
இதையடுத்து தேர்தல் கூடுதல் பறக்கும் படை 2 ஆவது அணி பி குழும அலுவலரும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி(கிராம ஊராட்சிகள்) அலுவலருமான சாந்திலட்சுமி தலைமையிலான குழுவினர் சேவூர் பந்தம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முருகேசன் என்பவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில், அவரது வீட்டில் தேர்தல் நாளன்று விநியோகம் செய்வதற்காக 2051 மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த முருகேசன், ஐயப்பன் ஆகிய இரு நபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகளையும் தேர்தல் பறக்கும் படையினர், சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர்.
இதையடுத்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேவூர் பந்தம்பாளையம் கருப்பசாமி மகன் முருகேசன்(57), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் ஐயப்பன்(35) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2051 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் சேவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.