ஓமலூர் அருகே அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்த அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்த அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள்


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணையாக, தேர்தல் அதிகாரிகளும் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வகையில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டேனிஷ்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகன் பெயர் மற்றும் சின்னம் பொறித்த, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதி பெறாத நிலையில், அவற்றை வாங்கியதற்கான ரசீது ஏதும் வாகனத்தில் வந்தவர்களிடம் இல்லை. 

இதனையடுத்து, அமமுக வேட்பாளரின் 300 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.கீதா பிரியாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும், பிற வாகனங்களில் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான வேட்டிகள், ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்கள், ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 493 பட்டுப்புடவைகளையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com