வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்: கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளர்கள் மறியல் 

கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்களை  வழங்குவதாகக் கூறி, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட அக்கட்சியினர்.
மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட அக்கட்சியினர்.
Published on
Updated on
1 min read

கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர், வாக்காளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்களை  வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், பாஜக சார்பில், அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

முக்கியப் பிரமுகர்கள் இத்தொகுதியில் போட்டியிடுவதால், கோவை தெற்கு நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடந்து வரும் நிலையில், வைசியாள் வீதியில்  உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே பாஜகவினர், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளுடன், வீட்டு உபயோகப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன்களை விநியோகிப்பதாகப் புகார் எழுந்தது. 

இதைத்தொடர்ந்து, அங்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தேர்தல் விதிமீறி வாக்காளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோஷமிட்டார். 

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த கோவை தெற்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப்பும் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மயூரா ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com