
திருப்பூரில் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டவரை காங்கயம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பில், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கயம் அருகே, திருப்பூர் சாலை பகுதியில் படியூர் சோதனைச் சாவடியில், காங்கயம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த வழியே வாகனப்பதிவு எண் பலகை இல்லாமல் ஒரு இருசக்கர வாகனம் திருப்பூரை நோக்கிச் சென்றுள்ளது.
அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயல, அந்த நபர் வண்டியை திருப்பி தப்பி ஓடப் பார்த்துள்ளார். மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரை விசாரித்துள்ளனர். அந்த வாகன ஓட்டி, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததில், சந்தேகமடைந்த போலீசார், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கின் மீது உள்ள பையைச் சோதனை செய்துள்ளனர். அதில், 2000 ரூபாய்த் தாள் 39, 500 ரூபாய்த் தாள் 83, 200 ரூபாய் தாள் 32, 100 ரூபாய் தாள் 31 என ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தின் மூலம் நகல் எடுக்கப்பட்ட நோட்டுக்கள் ஆகும். இந்தக் கள்ள நோட்டுக்கள் அனைத்தும் திருப்பூர் மாநகரில் புழக்கத்திற்கு விடுவதற்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, கள்ளுக்கடை சந்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் (34) என்று தெரிய வந்தது. இதனையடுத்து, காங்கயம் போலீசார் அந்த நபரை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் கட் பண்ணாமல் வைத்திருந்த 36 எண்ணிக்கையில் 2000 ரூபாய் ஜெராக்ஸ் தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து, திங்கள்கிழமை காங்கயம் நீதிமன்றத்தில் கண்ணனை ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.