
சென்னை: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருண்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குநர் செல்வ விநாயகம், வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உள்பட அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்கெனவே விதித்துள்ளது. ஆனாலும், நாள்தோறும் பதிவாகும் தொற்றானது கூடுதலாகி வருவதால், அதனை கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை நடைபெற்றுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது, பிளஸ் 2 தோ்வை எப்போது நடத்துவது என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.