தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை... கரோனா நோயாளிகளின்தான் பற்றாக்குறையா?: ப.சிதம்பரம் கிண்டல்

மத்திய அரசின் அறிவிப்புகளைப் பார்க்கும் போது நாட்டில் கரோனா நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலாக
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on
Updated on
1 min read


கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் புகாா் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்புகளைப் பார்க்கும் போது நாட்டில் கரோனா நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், தில்லி, கா்நாடகம், தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடன் மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷ்வா்தன் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்

இந்த உயா்நிலைக் கூட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரெம்டெசிவிா் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் அடுக்கடுக்கான புகாார்களை தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில் தடுப்பூசிகளுக்கு எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லை. மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் தனது சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

"மருத்துவமனைகளின் வாசலில் கரோனா தடுப்பூசிகள் இல்லை என்கிற அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டிருக்கும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், கரோனா தடுப்பூசி விநியோகத்தில் எந்த பற்றாக்குறையுமே இல்லை" என்கிறார். 

கரோனா நோயாளிகளுக்கு பற்றாக்குறை?: மத்திய அமைச்சர் சொல்வதை நம்புங்கள், கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என எதற்குமே பற்றாக்குறை இல்லை. இங்கே கரோனா நோயாளிகள் பற்றாக்குறை மட்டுமே உள்ளது! 

மேற்குவங்கத்தை கைப்பற்றி பாஜக பேரரசுடன் இணைக்கும் அவசர யுத்தத்திற்கு மத்தியில் கரோனாவுக்கு சிறிதும் நேரம் ஒதுக்கி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி என்று கிண்டலாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com