
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழகத்தில் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறந்து, 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி கோரும் நிலையில், தமிழக அரசு மத்திய அரசிடமும், நீதிமன்றத்திலும் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய விரும்பினால், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஆலை நிறுவி தாராளமாக ஆக்சிஜன் வழங்கலாம். ஆனால், இதை காரணம்காட்டி தமிழகத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்நிறுவனம் முனைப்பு காட்டுகிறது. அதற்கேற்றார்போல், காலை 8 மணிக்கு கருத்துக்கேட்பு கூட்டம் மக்கள் மனதில் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.
2018 - இல் 15 உயிரை குடித்த பகையாளிகள் இன்று உறவாடி கெடுக்க நினைக்கிறார்கள். விதிமுறை மீறியதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட், பாதுகாப்பற்ற ஸ்டெர்லைட் மூடப்பட்டதாகவே இருக்கட்டும். தற்போது தமிழகத்தில் ஒரு நாளைய ஆக்சிஜன் தேவை 250 டன் என்ற சூழலில், நாம் நாளொன்றுக்கு
400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தன்னிறைவு அடைந்ததுடன், 1167 டன் ஆக்சிஜன் இருப்பு வைத்துள்ளோம்.
எனவே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கரிசனம் தமிழகத்திற்கு அவசியமில்லை என தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகளிடம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.