வைத்தீஸ்வரன் கோயில்  கும்பாபிஷேகம்: பேரூராட்சி கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நடை பெற உள்ள நிலையில் வைதீஸ்வரன்கோயில் கோயில் பேரூராட்சி கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 
வைத்தீஸ்வரன் கோயில்  கும்பாபிஷேகம்: பேரூராட்சி கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 29-ம் தேதி நடை பெற உள்ள நிலையில் வைதீஸ்வரன்கோயில் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் திருமண மண்டபங்கள் மற்றும் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை அறிவிப்பு அனுப்பி  உள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ் பிறப்பிக்கப் பட்டுள்ள அந்த அறிவிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருமண மண்டபங்களில் திருமணம் சாராது விடுதிகளைப் போல வெளியூர் பயணிகளை தங்க வைக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களை விட கூடுதலாக இன்றி விழாக்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

தங்கும் விடுதிகளில் முன் பதிவு செய்வோரிடம் என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என விசாரித்து குட முழுக்கு தரிசிக்க எனில் திருக்கோயில் அனுமதி பெறாதவர்களுக்கு  குடமுழுக்கு விழாவுக்கு  அனுமதி   இல்லை என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டும். கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க ஏற்கனவே முன் பதிவு செய்தவர்களுக்கும்  இந்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

லாட்ஜ்களில் ஒவ்வொரு அறைக்கும்  அனுமதிக்கப் பட்ட நபர்களை மட்டுமே தங்க வைக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தக் கூடாது.

உணவகங்அளில் அனுமதிக்கப்பட்ட அளவிலான இருக்கைகள் மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும். அனுமதிக்கப் பட்ட நேரத்திற்கு மட்டுமே திறந்திருக்க வேண்டும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் நேரத்தில் கண்டிப்பாக பார்சல் தான் வழங்க வேண்டும். அந்த நேரத்தில் அமர வைத்து உணவு பரிமாறக்கூடாது. வாடிக்கையாளர்க்கு சூடான வெந்நீர்  வழங்க வேண்டும்.

திருமண மண்டபங்கள் , லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ள வேண்டிய  தொற்று தடுப்பு  பணிகள் மேலும் திருமண மண்டபங்கள் , லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்களில்  கை கழுவும் அமைப்பு, சானிடைசர், முககவசம் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசத்துடன்  கையுறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தரைகளில் சோடியம் ஹைப்போ குளோரைடு , கை தொடும் பகுதிகளில் லைசால் தெளிக்க வேண்டும், குடிக்க சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் , குடிநீர்த்தொட்டிகள் தூய்மை செய்யப் பட வேண்டும்  மற்றும் கழிவறைகள் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட முககவசங்கள், கையுறைகள் உயிரி மருத்துவக் கழிவுகள் என வகைப் படுத்தப் பட்டுள்ளதால்  அவற்றை வழக்கமான குப்பையுடன் வழங்காமல் தனியாகத்  தர வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் மீறுவோர் மீது அபராதம் விதித்தல், நிறுவனங்களைபூட்டி சீல் வைத்தல், உரிமம் ரத்து செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com