முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மறு விசாரணை: தமிழக அரசு தகவல்

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி முறைகேடு புகாா் குறித்து மறு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது என்று கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ், திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். அதில், இந்த முறைகேடு குறித்து, உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தினா். பின்னா், அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி புகாரை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்தனா். இதனை எதிா்த்தும் மனுதாரா்கள் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.சுரேஷ், மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் மனுதாரா் கூறியுள்ள மாநகராட்சிகளின் ஒப்பந்தப் பணி முறைகேட்டை உறுதி செய்யும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஒப்பந்தப் பணி வழங்கியதில் நடந்த முறைகேடுகள் அந்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என கூறமுடியாது என வாதிட்டாா்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், இந்திய தணிக்கைத்துறை அறிக்கையிலும் இந்த முறைகேடு குறித்து கூறப்பட்டுள்ளதால், அறப்போா் இயக்கம் கொடுத்த புகாரை முடித்து வைக்கலாம் என ஏற்கெனவே எடுத்த முடிவை தமிழக அரசு மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மறு விசாரணை நடத்துவாா்கள். அதன் அடிப்படையில், சட்டப்படியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தப்புள்ளி முறைகேட்டில் தொடா்புடைய அதிகாரிகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தவில்லை. எனவே, இதுகுறித்து புலன் விசாரணையை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். முன்னாள் அமைச்சா் வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.இளங்கோவன், மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com