
பப்ஜி மதன் வழக்கில் 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைபர் கிரைம் போலீஸ் தாக்கல் செய்துள்ளது.
குண்டா் சட்டத்தில் தன்னை கைது செய்ததை எதிா்த்து பப்ஜி மதன் தொடா்ந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான மதன்குமாா், தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தாா். சிறுவா்கள் பலா் இந்த யூடியூப் சேனலில் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளனா்.
அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவுகளை மதன்குமாா் வெளியிட்டு வந்தாா். இதுதொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மதன்குமாா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த மதனை காவல்துறையினா் தருமபுரியில் கடந்த ஜூன் 18 -ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையும் படிக்க- ராஜஸ்தானில் செப். 1 முதல் பள்ளிகள் திறப்பு
மேலும் மதனை சைபா் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையா், கடந்த ஜூலை 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இந்த நிலையில் இவ்வழக்கில் 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸ் இன்று தாக்கல் செய்துள்ளது.
அதில், 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.