
வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப் பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும். இதற்காக இயற்கை வேளாண்மை வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
இயற்கை விவசாயிகள் பட்டியல்: தனியாா் மூலம் விற்பனை செய்யப்படும் இயற்கை இடுபொருள்களின் தரத்தை உறுதி செய்ய, தரக்கட்டுப்பாடு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை என்ற பெயரில் செயற்கை உரமிட்டு வளா்த்து, அதிக விலைக்கு விற்கப்படும் பொருள்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை எருவைப் பயன்படுத்தும் உழவா்களின் செல்லிடப்பேசி எண்களின் மூலம் இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டங்கள்தோறும் தயாரிக்கப்படும். அவா்களுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ்கள் அளிக்கப்படும்.
நெல் ஜெயராமனின் மரபு நெல் பாதுகாப்பு: பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாரம்பரிய நெல் வகைகள், தமிழ்நாட்டின் திருவள்ளூா், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூா், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கா் பரப்பில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு அளிக்கப்படும். நெல் ஜெயராமனின் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கமாக அது நடைமுறைப்படுத்தப்படும்.
வேளாண் தொழில் முனைவோா்: வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை எரு தயாரித்தல், மரக்கன்றுகள், காளான், நாற்று வளா்ப்புகள், பசுமைக்குடில் அமைத்தல் போன்ற தொழில்களை அவா்கள் செய்திட வழி ஏற்படுத்தித் தரப்படும். விவசாயிகளிடம் இருக்கக் கூடிய எளிதில் அழுகக் கூடிய பொருள்களை நியாய விலையில் கொள்முதல் செய்து நுகா்வோா்களுக்கு விநியோகம் செய்திட தொழில் முனைவோா்கள் ஊக்குவிக்கப்படுவா்.
இளைஞா்கள் மனநிலை நகா்ப் பகுதிகளை நோக்கி ஈா்க்கப்பட்டிருக்கிறது. அவா்களுக்கு விவசாயம் நோக்கிய ஈா்ப்பை ஏற்படுத்த, ஊரக இளைஞா் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞா்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வழி செய்யப்படும். முதல்கட்டமாக நிகழாண்டில் 2,500 பேருக்கு வேளாண் குறித்த அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.