இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும்: கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை 

தமிழக அரசு தேர்தலின்போது அறிவித்த இல்லத்தரசிகளுக்கான மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சி  மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்
மானாமதுரையில் நடந்த சுதந்திர தினவிழாவில் பேசுகிறார் காங்கிரஸ் கட்சியின்  சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
மானாமதுரையில் நடந்த சுதந்திர தினவிழாவில் பேசுகிறார் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.
Published on
Updated on
2 min read

மானாமதுரை: தமிழக அரசு தேர்தலின்போது அறிவித்த இல்லத்தரசிகளுக்கான மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கும், பிரதிநிதித்துவமும் கிடையாது. ஆனால் இந்தக் கட்சி இந்தியாவில் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்து தலைமை தாங்கியது காங்கிரஸ் இயக்கம். இக்கட்சி எல்லோரையும் அரவணைத்து சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து மதத்தில் உள்பிரிவு ஏற்படுத்தி சமுதாயத்தை பிளவுபடுத்தும் கட்சியாக உள்ளது. பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசுகையில் ரூ. 100 லட்சம் கோடிக்கு திட்டங்களை வகுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மக்களுக்கு மறதி உள்ளது என மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே 2019, 2020 ஆம் ஆண்டுகளில் சுதந்திர தின உரையில் ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த நிதியிலிருந்து இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்யப்படவில்லை. தற்போது மூன்றாவது முறையாக அதே பொய்யை சொல்லி இருக்கிறார். இவ்வாறு பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்த இயக்கம்தான் பாஜக.

பிரதமர் மோடி இந்து முஸ்லிம்களுக்குள் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறார். தமிழ்நாட்டில் பாஜகவை வளரவிடாமல் மக்கள் எப்படி விழிப்பாக இருக்கிறார்களோ அதேபோல் வடமாநிலங்களிலும் மக்கள் விழிப்பாக இருந்து பாஜக வளர்ச்சியை தடுக்க வேண்டும்.

அதற்கு தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். பாஜக வளர்ச்சியை தடுத்தல் தான் இந்தியா ஒற்றுமையாக இருக்க முடியும் என்றார்.

இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஏ.சி சஞ்சய், நகரத் தலைவர் எம். கணேசன், வட்டாரத் தலைவர்கள் கே.கணேசன், ஆரோக்கியதாஸ், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மாவட்ட நிர்வாகி பால் நல்ல துரை,மாவட்ட இணைச் செயலாளர்கள் புருஷோத்தமன், காசி மகாலிங்கன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: 
பிரதமர் மோடி ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என சுதந்திர தின உரையில் மூன்றாவது முறையாக பொய்யைச் சொல்லி இருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ. 20 லட்சம் கோடி கரோனா நிவாரணத்திற்காக செலவிடப்படும் என தெரிவித்தார். ஆனால் இந்த நிதியிலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட யாருக்கும் செலவு செய்யவில்லை.

பாஜக சாயம் வெளுத்து வருகிறது. மக்கள் இந்த கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியைத் திணித்து பிற மொழிகளை மதிப்பது கிடையாது.

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ளதாக கூறும் பாஜக அரசு பல மாதங்களாக நாட்டின் தலைநகரில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதில் அக்கறை இல்லாமல் உள்ளது. 

தமிழகத்தில் திமுக அரசு முதல் முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாக உள்ளது.  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் -திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றும்.

தமிழக அரசு விரைவில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது என கார்த்தி சிதம்பரம் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com