கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த சீதாராம் யெச்சூரி, காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கரோனா மருந்து இருப்பு குறித்து தெளிவான பதிலை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் செங்கல்பட்டு, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டுள்ளார். கரோனா 3 ஆவது அலை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பெட்ரோலியப் பொருள்களுக்கு அதிகப்படியான வரியை மத்திய அரசு விதிக்கிறது. பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியால் 2020-2021 ஆம் ஆண்டு ரூ3.71 லட்சம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈட்டியுள்ளது. இதுவரை ரூ.15.6 லட்சம் கோடியை வரிவிதிப்புகள் மூலம் மத்திய அரசு ஈட்டியுள்ளது. சிபிஎம் கட்சி தொடர்ந்து பெட்ரோலிய பொருள்களின் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதன் மூலமே அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்க முடியும் என்றார்.