
தமிழகத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் ஏற்படும் உயிர் மற்றும் உடமைகளுக்காக தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுமன தமிழக வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறினார்.
உதகையில் இன்று மாவட்டத்தின் 37வது நடமாடும் நியாயவிலைக்கடையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் பல்வேறு வனக்குற்றங்களை தடுக்க கூடுதலான எண்ணிக்கையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் புதிதாக பணியமர்த்தப்படவுள்ளதாக கூறினார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் கீழ் இயங்கும் தேயிலை தொழிற்சாலைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் லாபத்தில் இயங்கும் வகையில் நவீனப்படுத்தப்படும் என்றார்.
இதையும் படிக்கலாமே.. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி: தொலைபேசி எண் அறிவிப்பு
தமிழகத்தில் விலங்குகளுக்கு ஏற்படும் ஆந்த்ராக்ஸ் போன்ற தொற்றுநோயை கட்டுப்படுத்த உயர்மட்ட மருத்துவ குழு ஏற்படுத்தப்படும் எனவும், இக்குழு மாவட்டங்களில் செயல்படும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்றார். தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்த தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், இதன் ஒரு பகுதியாக ஆண்டிற்கு 5 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மனித - விலங்கு மோதல்கள் தொன்று தொட்டு நடைபெறும் சம்பவம் என்றும், காப்பு காடுகளை சுற்றி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாலும், மனிதர்கள் தேவையின்றி காடுகளுக்கு அத்துமீறி செல்வதாலுமே மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதாக கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.