பாமகவின் அரசியல் கணக்கு

தமிழகத்தில் அடுத்து தங்களது ஆட்சிதான் என்னும் பாமகவின் புதிய அரசியல் கணக்கு வெற்றி பெறுமா அல்லது வெற்று முழக்கமாகிவிடுமா என்னும் கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
பாமகவின் அரசியல் கணக்கு
பாமகவின் அரசியல் கணக்கு
Updated on
3 min read

தமிழகத்தில் அடுத்து தங்களது ஆட்சிதான் என்னும் பாமகவின் புதிய அரசியல் கணக்கு வெற்றி பெறுமா அல்லது வெற்று முழக்கமாகிவிடுமா என்னும் கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

2021 சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்தது பாமக ஆட்சிதான் என்ற முழக்கத்தை எழுப்பியிருக்கிறார் அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ். அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில்  திமுக, அதிமுக, பாமக இடையேதான் மும்முனைப் போட்டி என்றும், அடுத்து பாமக ஆட்சிதான் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். 

நீட் விவகாரத்தில்...: அதே நேரத்தில், பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நடைபெறவுள்ள 2024 மக்களவைத்  தேர்தல் தொடர்பான கேள்விக்கு செயற்குழு, பொதுக்குழு ஆகியவை கூடி கூட்டணியை முடிவு செய்யும் என்றார். ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்படுகிறார், ஆனால், நீட் விவகாரத்தில் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.  இதேபோல, ராகுல்காந்தியும்  சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும்,  அவருக்கு வேகம் போதவில்லை என அவரது கட்சியினரே கருதுவதாகவும்  அவர் கருத்து தெரிவித்தார்.
தேசிய கட்சிகளுடன்...: 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அணியில் இருப்பதால் மாற்று அணிக்கு இடம்பெயரலாம் என்ற யோசனை ராமதாஸýக்கு வந்திருக்கக்கூடும். பிரதமர் வேட்பாளரின்றி மக்களவைத் தேர்தலைச் சந்தித்தால் தோல்வி ஏற்படும் என்பதால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு அணிகளிலும் பாமக}வுக்கு கூட்டணி வாய்ப்பு இருப்பதை ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்னிறுத்த முடியும் என்பதால், மீண்டும் தனித்துப் போட்டி என்ற முழக்கத்தையும் ராமதாஸ் அடிக்கோடிட்டு காட்டியுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் கணக்குகள்: பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற அரசியல் நகர்வை ராமதாஸ் முன்னெடுப்பதற்கு பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அடுத்தத் தேர்தலில் தனது கட்சிக்கு வர வேண்டிய வாக்குகளுக்கு பாதகம் வராமல் முன்கூட்டியே வியூகம் வகுத்துச் செயல்படுவதில் மிகுந்த சாமர்த்தியமான அரசியல்வாதியாக திகழ்பவர் ராமதாஸ். அதனால்தான், பாமக தொடங்கிய 1989 முதல் இதுவரை நடைபெற்ற பெரும்பான்மையான தேர்தல்களில் அந்தக் கட்சி சுமார் 5 சதவீத வாக்குகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
10.5 சதவீத ஒதுக்கீடு காரணமாக...: 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அதிமுக அணியில் இடம்பெற்று 23 பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக 90 சதவீத வன்னியர் வாக்குகள் அதிமுக அணிக்கு அப்படியே விழுந்ததால், சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிமுக அணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வட தமிழகத்தில் அந்த அணி வேட்பாளர்கள் சுமார் 40 சதவீத வாக்குகளையும் பெற முடிந்தது.

இப்போது, திமுக ஆட்சி மலர்ந்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒப்புதல் அளித்துவிட்டதால், இனிமேல் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய இயலாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ராமதாஸ். மேலும், 2016, 2019, 2021 என தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஸ்டாலினுக்கு எதிராக ராமதாஸ் வியூகம் அமைத்துச் செயல்பட்டதால் பாமகவின் வாக்கு வங்கி என்பது ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குகளாகவே உள்ளது.

மேலும்,  வட தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள்,  பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்குகள்தான் திமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது. இப்போதைக்கு திமுக}பாமக வாக்குகளை ஒரே புள்ளியில் கொண்டுவந்து தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். எனவே,  மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் எண்ணெயும், தண்ணீரும் சேராதது போல பொருந்தாக் கூட்டணியாகவே மாறும் என்பது ராமதாஸýக்கு நன்கு தெரியும்.

அன்புமணியை மீண்டும் முன்னிறுத்துவது ஏன்?: இப்படியே தொடர்ந்து கூட்டணி அரசியலை பாமக கையாளும்போது, அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கியாகத் திகழும் வன்னியர்கள், குறிப்பாக வன்னிய இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி, ஹிந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் பாஜக ஆகியவற்றால் கவரப்பட்டால் பாமகவின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்பதை முன்கூட்டியே உணரத் தொடங்கியுள்ளார் ராமதாஸ். இதனால்தான், மீண்டும் "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற கோஷத்தை தூசு தட்டியுள்ளார் ராமதாஸ். 
அதிமுகவுக்கு அதிக லாபம்: 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளை மக்களவைத் தொகுதி ரீதியாகஆய்வு செய்தால், 2021}இல் அதிமுக அணிக்கு பாமகவால் அதிக லாபம் கிடைத்துள்ளது தெரியவருகிறது. 2019}தேர்தலில் வட மாவட்டங்களில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக அணி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் சேலம், தருமபுரி,  கிருஷ்ணகிரி, சிதம்பரம்  தொகுதிகளில் அதிமுக அணி மீண்டும் அதிக வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளது. மேலும், மீதமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக அணிக்கு,  அதிமுக மிகக் கடுமையான போட்டியை கொடுக்க பாமக உதவியுள்ளது. 

வாக்குகளை மடை மாற்றம் செய்ய...: இதற்குக் காரணம்,  2019}இல் மூன்றில் ஒரு பங்கு வன்னியர் வாக்கு திமுக அணிக்கு கிடைத்தது. திமுகவுக்கு கருணாநிதி தலைமை வகித்த காலம் முதல் காலம் காலமாக திமுகவுக்கு கிடைத்து வந்த வன்னியர் வாக்குகளையும் சேர்த்து அதிமுக அணிக்கு 2021}இல் மடைமாற்றம் செய்ய உதவியது பாமக. இருப்பினும்,  தலித், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் திரண்டு திமுகவுக்கு வாக்களித்ததால் வட தமிழகத்தில் 65 தொகுதிகளில் 54 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. 
திமுகவிடம் இருந்து மடைமாற்றம் செய்யப்பட்ட வன்னியர் வாக்கு வங்கியை மீண்டும் திமுகவுக்கு திருப்பும் முயற்சியாகத்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.  திமுகவின்  இந்த அரசியல் நகர்வு வெற்றி பெற்றால், கொங்கு மண்டலமான நாமக்கல்,  சேலம், தருமபுரி, வட தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவின் செல்வாக்கு அதிகரித்து அது பாமகவுக்கு அரசியல் ரீதியாக இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, பாமகவின் வாக்குகளை தக்கவைக்க தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை ராமதாஸ் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தனித்துப் போட்டி சாத்தியமா? 2016-இல்  "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்ற முழக்கத்துடன் முதல் முறையாக எண்ம தொழில்நுட்ப (டிஜிட்டல்) பிரசார முறையைக் கையாண்டு தனித்துப் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்வர் வேட்பாளரான அன்புமணி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் 2}ஆவது இடத்தையே பெற முடிந்தது.

போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும், 5.36 சதவீத வாக்கு வங்கியுடன் பாமக அரசியல் சக்தியாகவே தொடர்ந்தது. 2021}இல் அதிமுக கூட்டணியில் நீடித்த பாமக, 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

2009, 2011, 2014, 2016, 2019, 2021 என தொடர்ந்து 6 தேர்தல்களிலும் பாமக தோல்வி வளையத்தில்தான் உள்ளது. இதிலிருந்து மீள மீண்டும் தனித்துப் போட்டி என்ற அடுத்தகட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது பாமக. ராமதாஸின் அரசியல் நகர்வு வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com