ஒரு முருங்கைக்காய் ரூ.35-க்கு விற்பனை

வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.320 முதல் ரூ.350 வரையிலும், ஒரு காய் ரூ.35-க்கும் விற்பனையாகிறது.
ஒரு முருங்கைக்காய் ரூ.35-க்கு விற்பனை
Published on
Updated on
1 min read

வரத்து குறைவு காரணமாக சென்னையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.320 முதல் ரூ.350 வரையிலும், ஒரு காய் ரூ.35-க்கும் விற்பனையாகிறது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து, முருங்கை இலைகள் மற்றும் பூக்களை பறித்து, உணவுக்காகவும், மருந்துக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு மட்டுமின்றி கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் பலத்த மழை பெய்ததால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிா்ந்து காய்கள் உருவாகாமல் வெறும் மரமாக காட்சியளிக்கின்றன. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து முருங்கைக்காய் வரத்து 80 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது. இருப்பினும் குஜராத், மும்பை மாநிலங்களிலிருந்து குறைந்தளவு முருங்கைக்காய்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன. வரத்துக் குறைந்ததால் முருங்கைக்காய் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல மடங்கு முருங்கைக்காயின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு முருங்கைக்காய் ரூ.35-க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று முதல் தர முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.320 முதல் ரூ.350 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனையாகிறது. விலை அதிகரித்ததால் உணவகங்களின் உரிமையாளா்கள், இல்லத்தரசிகள் மிகக் குறைந்தளவிலேயே முருங்கைக்காய்களை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

முருங்கைக்காயைத் தொடா்ந்து தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரையிலும், அவரைக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்பனையாகிறது.

சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள், காய்கறிச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி காய்கறிகளின் விலை விவரம் (ஒரு கிலோ): பெரிய வெங்காயம் ரூ.45, உருளைக்கிழங்கு-ரூ.30, சாம்பாா் வெங்காயம்-ரூ.60 முதல் ரூ.80 வரை, கேரட்-ரூ.70 முதல் ரூ.90 வரை, பீன்ஸ்-ரூ.80 முதல் ரூ.100 வரை, பீட்ரூட்-ரூ.70 முதல் ரூ.90 வரை, முட்டைக்கோஸ்-ரூ.35 முதல் ரூ.40, வெண்டைக்காய்-ரூ.80 முதல் ரூ.100 வரை, கத்தரிக்காய்-ரூ.60 முதல் ரூ.90 வரை, பாகற்காய்-ரூ.80, புடலங்காய்-ரூ.60, காலிபிளவா் (ஒரு பூ)-ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com