ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு 

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்,  செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு மூலஸ்தானத்திலிருந்து ராஜமகேந்திரன் சுற்று வழியாக பரமபதவாசல் நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு  புறப்பட்டு சென்ற நம்பெருமாள்.
ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு மூலஸ்தானத்திலிருந்து ராஜமகேந்திரன் சுற்று வழியாக பரமபதவாசல் நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்ற நம்பெருமாள்.
Published on
Updated on
2 min read

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்,  செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாட்டு காரணமாக பரமபதவாசல் திறப்பின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர், விதிமுறைகளுடன் காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல்பத்து, இராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் டிச.4ஆம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை (டிச.13)  நம்பெருமாள், மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. பரமபதவாசலில் எழுந்தருள்வதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.  

பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணமான  ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களின் கண்களை நிறைக்கும் அழகுடன் மூலஸ்தானத்திலிருந்து  சிம்மகதியில் புறப்பட்டு வந்தார். சந்தனு மண்டபத்தில் ஸ்தலத்தார், தீர்த்தகாரர்களுக்கு மரியாதை நடந்தது.

அதன்பின் மேலப்படி வழியாக நம்பெருமாள் இரண்டாம் பிரகாரம் எனப்படும் ராஜமகேந்திரன் சுற்றை அடைந்தார். பின்னர் நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் எனப்படும் தங்கக் கொடி மரம் உள்ள குலசேகரன் திருச்சுற்றுக்கு வந்தார். அங்கிருந்து துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு செல்லும் வழியில் நம்பெருமாள் விரஜா நதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பம் கேட்டருளினார். பின்னர் பரமபதவால் பகுதியை அடைந்தபின் ஸ்தானீகர் கட்டியம் கூற காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

அந்த வாசல் வழியே வந்த நம்பெருமாள், தவிட்டறை வாசலை கடந்து மணல் வெளியில் பருத்தி உலா கண்டருளி, ஆயிரங்கால் மண்டபம் வழியாக திருமாமணி மண்டபம் அடைந்து, இரவு வரை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை இராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.

கரோனா கட்டுப்பாடு: கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பரமபத வாசல் திறப்பு நிகழ்வில், ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com