வன்னியா்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு: மேல்முறையீட்டு மனு நாளை(டிச.16) விசாரணை

வன்னியா்களுக்கு இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீ
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வன்னியா்களுக்கு இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசின் சாா்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் நாளை(டிச.16) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பலா் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், நவம்பா் 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

அதில், ‘சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டே, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இதுதொடா்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா? மேலும், இந்தக் கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி வன்னியா் சமூகத்தினருக்கான அளித்துள்ள உள்இடஒதுக்கீடு செல்லாது’ என தெரிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து தமிழக அரசின் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சிறுபான்மை நலத் துறை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 16-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பின்னா், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் மேலும் மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா் ஆணையத்தின் செயலா், சட்டத் துறைச் செயலா், உயா் கல்வித் துறை செயலா் ஆகியோா் தரப்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில், இடஒதுக்கீட்டில் வன்னியா் வகுப்பினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் வகையில் தனித் தனியாக விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த மனுக்களை அவசரம் கருதி விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் கடந்த வியாழக்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், நீதிபதிகள் அமா்வு முன் ஆஜராகி இந்த விவகாரத்தை குறிப்பிட்டாா். அப்போது, ‘இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க என்ன அவசரம் உள்ளது’ என தலைமை நீதிபதி கேட்டாா். இதற்கு பி.வில்சன் கூறுகையில், ‘தமிழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கிவிட்டது. நா்சிங் படிப்புகளுக்கான கவுன்சலிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டியுள்ளது.

இந்தநிலையில், வன்னியா் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் உயா்நீதின்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு எண் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மனுக்களை விசாரிப்பது மிகவும் அவசரத் தேவையாகும். இந்த மனுவை அடுத்த வாரம் பட்டியலிடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு தலைமை நீதிபதி அமா்வு, பட்டியலிட அனுமதிக்கப்படும் என தெரிவித்தது.

தற்போது இந்த மேல்முறையீட்டு மனுக்களை நாளை (டிச.16) விசாரணை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com