திருவையாறு ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசைக் கலைஞர்கள் அஞ்சலி

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக் கலைஞர்கள் பாடி அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய இசைக் கலைஞர்கள்.
திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய இசைக் கலைஞர்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 174 ஆவது ஆராதனை விழா பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 2 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி  நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸே...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு நடைபெற்ற அபிஷேகம்.
ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு நடைபெற்ற அபிஷேகம்.

முன்னதாக, காலை 5.30 மணியளவில் திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் இவ்விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக இவ்விழா இரு நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், குறைந்த அளவிலேயே இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதேபோல பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com