உத்தமபாளையம் அருகே  அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
அய்யம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா.
அய்யம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா.


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

அய்யம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஏழைகாத்தம்மன்- வல்லடிக்காரர் சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்கின்றன. 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் காளையாக அய்யம்பட்டி கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி ,கரூர்  சேலம்  உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக வெளியேற்றப்பட்டு போட்டியில் பங்கேற்று வருகின்றன. 

முன்னதாக அனுமதி பெற்ற காளைகளை கால்நடை  மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளித்து வருகின்றனர்.

அதேபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவர்கள் உடற்கூறு பரிசோதனை செய்தும் கரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று சீறிவரும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி பரிசுகளைப் பெற்று வருகின்றனர்.

காளைகளும் தங்களை எதிர்நோக்கி வரும் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி அவர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்று பரிசுகளை தட்டிச் செல்கின்றன.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை  4 மணி வரையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com