3-ஆவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை: முத்தரசன் பேட்டி

கடந்த தேர்தலைப் போல தமிழகத்தில் 3-ஆவது அணி அமைவதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
Published on
Updated on
2 min read

மதுரை: கடந்த தேர்தலைப் போல தமிழகத்தில் 3-ஆவது அணி அமைவதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை தங்களது உத்தரவுகளை நிறைவேற்றும் அமைப்புகளாகப் பயன்படுத்தி வருகிறது. ஜனநாயக நடைமுறைகளைக் கைவிட்டு சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இசைவு தெரிவிக்கும் அரசாக தமிழக அரசு மாறிவிட்டது. இத்தகையப் போக்கில் இருந்து தமிழகத்தை மீட்கும் விதமாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிப்ரவரி 18 ஆம் தேதி அரசியல் எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

பேரவைத் தேர்தலுக்காக பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அதிமுக அரசு வெளியிட்டிருக்கிறது. அதிலும் இந்த கடன் தள்ளுபடி திட்டம் ஆளுங்கட்சியினர் பயனடைவதாக இருக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது விவசாயிகள் பெற்ற குறுகிய கால கடன், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டன. இப்போது அறிவித்துள்ள திட்டத்தில் மத்திய காலக் கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவர். 

அதோடு, தள்ளுபடி அறிவிப்பு வருவதற்கு சில நாள்களுக்கு முன்பாக ஆளுங்கட்சியினர் பலருக்கும் பயிர்க் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். 
அதேபோல, தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 

அண்மையில் தில்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகைகளைத் தருமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது, எவ்வளவு நிதி கோரப்பட்டது, அதில் தற்போது கிடைத்திருக்கும் தொகை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் தொடர்ந்து பிரதமர் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசுவது ஏற்புடையதல்ல.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாகவே மதுரை மாநாடு நடைபெற உள்ளது. மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையிலான குழு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

திமுக அணியில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தி சுமுகமாக முடிக்கப்படும். 

மூன்றாவது அணி: கடந்த தேர்தலைப் போல மூன்றாவது அணி உருவாகும் சூழல் இப்போதைக்கு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறக் கூடாது என்பது தான் முக்கியக் குறிக்கோள்.  பாஜக இடம்பெறும் கூட்டணியை எதிர்த்து தேர்தல் பணியாற்றுவோம். அந்த அடிப்படையில் திமுக அணியில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதை எங்களது கட்சி அறிவித்துவிட்டது. 

திமுகவை வீழ்த்த வேண்டும் என சசிகலா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், முதலில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவது, அவர்கள் மீதான கருணையில் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. முறைகேடு செய்வதற்கான ஏற்பாடாகவே இருக்கிறது என்றார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பா.காளிதாசன், மாநகரச் செயலர் எம்.சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com