பாஜகவுக்குத் திரளும் புதிய வாக்கு வங்கி!

தேவேந்திரகுல வேளாளர் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில்,
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
4 min read

தேவேந்திரகுல வேளாளர் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு என புதிய வாக்கு வங்கி திரள வாய்ப்பு உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 பாஜக காலூன்ற முடியாத மாநிலம் எனக் கருதப்பட்டு வரும் தமிழகத்தில் அந்தக் கட்சியை வளர்க்க புதிய வியூகங்களை பிரதமர் மோடி, அமித் ஷா கூட்டணி செயல்படுத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக  தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அடர்த்தியாகவும், கொங்கு மண்டலம்,  டெல்டா மாவட்டங்களில் பரவலாகவும் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் மீது பாஜகவின் பார்வை 2015}ஆம் ஆண்டு முதல் திரும்பியுள்ளது.
  அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான பள்ளர், தேவேந்திர குலத்தார், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தனி ஜாதியாக பெயர் சூட்ட வேண்டும் என்பதும்,  தங்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றி, பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதும் கால் நூற்றாண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது.

 மருத நிலத்தின் கடவுளான இந்திரனை வழிபட்டு வேளாண்மை செய்வதால் தாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைக்கப்பட்டதாகவும்,  மருத நிலத்தின் பூர்வீகக் குடிமக்களான தாங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் செய்த வரலாற்றுப் பிழையால் பட்டியல் இனத்தில் சிக்கிக்கொண்டோம் என்றும், பட்டியல் இனத்தில் இருப்பதால் பல்வேறு சமூக சிக்கல்களைó சந்தித்து வருவதால் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்பதும் அவர்களது முதல் கோரிக்கை.

 பட்டியல் இனத்தில் இட ஒதுக்கீட்டால் தங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; அரசியல் அதிகாரமும் பெற முடியவில்லை என்பதாலும் தங்களைஅதிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் பெரும் பகுதியும், ஆதிதிராவிடர்களுக்குச் சென்று விடுவதால் தேவேந்திர வேளாளர்கள், அருந்ததியினர் உள்ளிட்டோர் பயனடைவதில்லை என்பது அவர்களது நீண்டநாள் குற்றச்சாட்டு. இந்தக் கோரிக்கைகளை அந்தச் சமுதாயத்தில் அரசியல் சக்தியாகத் திகழும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளைத் தலைவர் தங்கராஜ் மற்றும் செந்தில் மள்ளர் உள்ளிட்டோர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். 

 தமிழகத்தில் ஏறக்குறைய 5 முதல் 6 சதவீதம் வரை மக்கள் தொகையுடன் வாழும் தங்களது சமுதாயத்தினரின் வாக்கு வங்கி பலத்துக்கேற்ப முழுமையான அரசியல் அதிகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்ற மனக் குறை இவர்களிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.  தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட கொடியன்குளம் ஜாதிக் கலவரத்துக்குப்பின் இந்தச் சமூகத்தில் அரசியல் சக்தியாக மாறி நிற்கும் கிருஷ்ணசாமி, 1996}இல் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் முதல் முறையாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்எல்ஏ.வாகத் தேர்வாகி, அதற்குப்பின் இதுவரை இந்தச் சமூக வாக்குகளை தனது வாக்குகளாக மாற்றி வைத்திருக்கிறார்.

 தென்காசி தொகுதியின் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம்,  நிலக்கோட்டை தொகுதியில் பலமுறை தேர்வான முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் ஆகியோரை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சியும், அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கிக்கு எதிராக தேவேந்திர குல வேளாளர்களை திருப்பி தங்களுக்கு சாதகமாக திமுகவும் இதுவரை அரசியல் செய்து வந்தனர். 

 1989}ஆம் ஆண்டு காலகட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்தி இந்தச் சமுதாய வாக்குகளில் குறிப்பிட்ட அளவை பாமகவும் சிறிது காலம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாலும் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர் பாமகவிலிருந்து வெளியேறிய பிறகு இங்கு பாமகவின் செல்வாக்கும் படிப்படியாகத் தேய்பிறையானது.
 இந்தச் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்து 2.2.2011}இல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நீதிபதி ஜனார்த்தனன் குழுவை அமைத்தார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்தக் குழுவால் இவர்களின் கோரிக்கை பயனற்று போய்விட்டது.

 மேலும், கொங்கு வேளாளக் கவுண்டர், பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர், கார் காத்த வேளாளர், தொண்டை மண்டல வேளாளர், நெல்லை சைவ வேளாளர்கள் ஆகிய சமூகத்தினர் தங்களது ஜாதிகளில் "வேளாளர்' என இருக்கும் நிலையில்,  தேவேந்திர குல வேளாளர் என்ற பெயருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

 இதனால், அடுத்து வந்த அதிமுக ஆட்சியும்  தங்களது வாக்கு வங்கிக்கு சேதாரம் ஆகிவிடக்கூடாது என எண்ணி தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையைக்  கிடப்பில் போட்டது. திராவிட கட்சிகளால் தாங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதாக மனக் குமுறலில் இருந்த இந்தச் சமுதாய மக்கள் மீது பாஜகவின் கவனம் 2015}ஆம் ஆண்டு முதல் திரும்பியது.
 அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் மதுரையில் 2015}ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநாட்டில், "மதுரை பிரகடனம்' எனும் தலைப்பில் இந்தக் கோரிக்கைக்கு வலுவான ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கடுத்த மாதத்தில் தில்லிக்கு  இந்தச் சமூகத்தைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை பிரதமர் மோடி அழைத்து முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும் தேவேந்திரகுல வேளாளர் பட்டம் நிச்சயம் வழங்கப்படும் என உறுதியளித்தார். அப்போதிலிருந்தே பிரதமர் மோடி மீது இந்தச் சமுதாய மக்களுக்குப் பாசமும், பற்றுதலும் அதிகரிக்கத் தொடங்கியது.
 
 இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரைப்படி தற்போது தேவேந்திர குல வேளாளர்கள் திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி  அறிவித்துள்ளது இந்தச் சமூதாய மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவை ஆய்வு செய்தால், இந்தச் சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருமளவு ஆதரவாகவே வாக்குகள் கிடைத்தது தெரிகிறது. இந்தச் சமுதாய மக்களிடம் பிரதமர் மோடிக்கு ஆதரவு இருக்கிறது என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை வெற்றிபெறச் செய்ய பிரதமர் மோடியை அழைத்து பிரசாரம் செய்ய வைத்தார். இதையடுத்து, இந்தச் சமூகத்தின் முழு ஆதரவும் திரண்டு அந்த மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியானது.

மேலும் தென் மாவட்டங்களில் இவர்கள் அடர்த்தியாக வாழும் தனித் தொகுதிகளின் முடிவுகளை ஆய்வு செய்தால் பிற தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழுந்த வாக்குகளைவிட தனித் தொகுதிகளில் கூடுதலாக 10 முதல் 12 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இந்தச் சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகள் விழாமல் அதிமுக கூட்டணி கூடுதல் வாக்குகளை பெற்றிருக்க வாய்ப்பு இல்லை.

மேலும்,  கனிமொழியின் நுணுக்கமான பிரசாரம், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.வின் களப் பணி ஆகிய காரணங்களால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஓட்டப்பிடாரம் தொகுதியில் மட்டும் இந்தச் சமூக வாக்குகள் திமுகவுக்கு விழுந்ததையும் தேர்தல் முடிவு காட்டுகிறது.

 22 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது.  குறிப்பாக தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் அடர்த்தியாக வாழும் நிலக்கோட்டை (தனி),  மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி),  சாத்தூர்,  விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்க அந்தச் சமுதாயத்தினரின் பங்கு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 2015}ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முழுக் கவனம் செலுத்தி தேவேந்திரகுல வேளாளர் பட்டத்தை பாஜக கொடுக்க மேற்கொண்ட முயற்சியால் அந்தச் சமூக மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த வெற்றிக்கு அதிகம் உதவியது பாஜகதான் என இந்தச் சமூக மக்களின் ஆழ்மனதில் பதிவாகியுள்ளது.

 இதனால் இதுவரை அரசியல் அதிகாரம் பெறாமல் எதிர்ப்பு மன நிலையில் வாக்களித்த இவர்கள், இனிமேல் நேர்மறையாக பாஜக இருக்கும் அணிக்கே வாக்களிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இதனால் இந்தச் சமுதாயத்தினரின் வாக்குகள் பாஜகவை நோக்கித் திரளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொங்கு வேளாளர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், தங்களது சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி தற்போது முதல்வராகவும்,  வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் களம் காண்பதால் பெரிய அளவுக்கு கொங்கு மண்டலத்தில் எதிர்ப்பலை இல்லை.
 ஆனால்,  தென் மாவட்டங்கள்,  டெல்டா மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.  இருப்பினும் சோழிய வேளாளர்கள், கார்காத்த வேளாளர், தொண்டை மண்டல வேளாளர்,  சைவ வேளாளர்,  துளுவ வேளாளர் ஆகியோர் ஒரே தொகுதிக்குள் அடர்த்தியாக இல்லாமல்,  பரவலாக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்தக் கோரிக்கைக்கு  ஆதரவுக் கரம் நீட்டினார்.

 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கிடைத்த முக்குலத்தோர் வாக்கு வங்கி வெளியேறியுள்ள நிலையில், அதைச் சரிசெய்ய தேவேந்திர குல வேளாளர் வாக்கு வங்கி அந்தக் கூட்டணிக்கு உதவும். பாஜக ஆதரவு மனநிலையில் இந்தச் சமுதாய மக்கள்  திரும்பியிருப்பது,  ஏற்கெனவே இந்தச் சமூகத்தில் வாக்கு வங்கியை வைத்திருக்கும் கிருஷ்ணசாமிக்கு  நெருக்கடியாகியுள்ளது. பாஜகவை நோக்கித் திரள்கிறது தேவேந்திரகுல வேளாளர் வாக்கு வங்கி. என்ன செய்யப்  போகிறார்  கிருஷ்ணசாமி?  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com