புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, நாளை பாசனத்திற்கு திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து, நாளை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்.
Published on
Updated on
1 min read


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து, நாளை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலை பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. 

இந்நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை  பெய்யவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக ஆனைமடுவு  அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில், நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, செப்டம்பர் 15ந் தேதி அணையில் 28.21 அடியில் 40.36 மில்லியன் கனஅடி தேங்கியது.

அக்டோபர் மாதத்தில்  பெய்த மழையில், அணையில்  47.57 அடியில், 111.47 மில்லியன் கன அடி தண்ணீர்  தேங்கியது.

தொடர்ந்து, நவம்பர்,  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பெய்த பருவ மழையால்,நீர்மட்டம் உயர்ந்து, தற்போது 65.61  அடியை எட்டியுள்ளது. அணையில் 250.10 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்கள் நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு,  இந்தாண்டு  ஆனைமடுவு அணை நிரம்பி வழியும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள், அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென,  கடந்த மாத இறுதியில் நடைபெற்ற பாசன விவசாயிகள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 8 மணி அளவில் ஆனைமடுவு அணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விழாவில் மக்கள் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள்,  விவசாயிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

அணை பாசன வாய்க்காலிலும்,  ஆறு மற்றும் ஏரி பாசன பாசனத்திற்கு வசிஷ்டநதியிலும் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படுமென  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com