சீர்காழி நகை வியாபாரி மனைவி, மகன் கொலை: நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது-நகைகள் மீட்பு

சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
கொலையர்கள் தாக்கியதில் உயிரிழந்த தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில்.
கொலையர்கள் தாக்கியதில் உயிரிழந்த தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா, மகன் அகில்.


 
மயிலாடுதுறை: சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார் . மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  புதன்கிழமை அதிகாலை காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48 ) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளிவில் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர. அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார் அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் சிடி ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின்  வீட்டு வாசலில் இருந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா இன்ஸ்பெக்டர் மணிமாறன், சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளையர்கள் இந்தியில் பேசியதால் வடமாநிலத்தில் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது. 

இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காரில் தப்பிச் சென்ற கொள்ளை கும்பல் சீர்காழி புறவழிச்சாலையில் மேலமாத்தூர் செல்லும் பகுதியில் அந்த காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்தது. 

இதையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டிய போலீஸார், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த வட இந்திய கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகள் அனைத்தும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com