
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தெப்பக்குளத்தை வலம் வந்த மீனாட்சியம்மன் மற்றும் சுவாமியை ஏராளமானோர் வியாழக்கிழமை தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின்போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் தெப்பத் திருவிழா ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர்.
திருவிழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும், 11-ஆம் நாளான புதன்கிழமை மதுரையை அடுத்த சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு நிகழ்வும் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்மன் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்தில் அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமியும் எழுந்தருளி கோயிலிலிருந்து புறப்பாடாகினர். நான்கு சித்திரை வீதிகள் சுற்றி கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி - அம்மனுக்கு, மங்கள வாத்தியங்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தெப்பக்குளத்தை இருமுறை வலம் வந்து, தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
தெப்பக்குளத்தை வலம் வந்த சுவாமி-அம்மனை ஏராளமானோர் திரண்டு தரிசனம் செய்தனர். பின்னர் இன்று இரவு தெப்பத்தில் இருமுறை தெப்பக்குளத்தை வலம் வரும் சுவாமி-அம்மன் அதன் பிறகு திருக்கோயிலை வந்தடைவர். கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் க.செல்லத்துரை உள்ளிட்டோர் தெப்பத்திருவிழா ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, தீயணைப்புத் துறையினரும் தெப்பக்குளத்தில் மோட்டார் படகுகளில் கண்காணிப்பில் இருந்தனர்.
2-ஆம் ஆண்டாக நீர்நிறைந்த தெப்பத்தில் திருவிழா
வைகை ஆற்றிலிருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. காலப்போக்கில் கடந்த பல ஆண்டுகளாக, இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீர்வரத்து தடைப்பட்டது. இதனால், பல ஆண்டுகள் தெப்பக்குளத்தில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், பனையூர் கால்வாய் வழியாக நீர்வரத்து வரும் வகையில் புனரமைப்பு செய்யப்பட்டதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் நீர்நிறைந்த தெப்பக்குளத்தில் திருவிழா நடைபெற்றது. நிகழாண்டிலும் அதே நிலை தொடருவதால், 2-ஆவது ஆண்டாக நீர்நிறைந்த தெப்பத்தில் நடைபெறும் திருவிழாவைக் காண மதுரை மட்டுமின்றி வெளியூர்களைச் சேர்ந்த பலரும் வருகை தந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.