மேட்டூர் அணை: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று மாலை நிறுத்தப்படுகிறது?

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் வியாழக்கிழமை மாலை (ஜன.28) 6 மணிக்கு நிறுத்தப்படும்.  
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.
Published on
Updated on
1 min read


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் வியாழக்கிழமை மாலை (ஜன.28) 6 மணிக்கு நிறுத்தப்படும். அதன் பிறகு குடிநீர் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். 

குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசனத்தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர் நோக்கி ஜூன் 12 இல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் 12 இல் காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தாலும் தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஜூன் 12 முதல் வியாழக்கிழமை காலை வரை (ஜன. 28) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 164.97 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்தும் மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு 200.14 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.

கடந்த சில தினங்களாக காவிரி டொல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. டெல்டா விவசாயிகள் தண்ணீர் திறப்பை நீட்டிக்க கோரினால் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்படாமல் இருந்தால் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பிறகு குடிநீர் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,069 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.78டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com