அரிவாள் வெட்டு காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காப்பாளர் காஜாமைதீன்.
அரிவாள் வெட்டு காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காப்பாளர் காஜாமைதீன்.

தமிழக வனத்துறையினர்-கேரள வேட்டைக்காரர்களுக்கும் இடையே மோதல்: 2 பேர் காயம்

தமிழக வனத்துறையினரை துப்பாக்கியால் சுட முயற்சித்த கேரள வேட்டைக்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர், இதில் காயம்பட்ட 2 வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கம்பம்: தமிழக வனத்துறையினரை துப்பாக்கியால் சுட முயற்சித்த கேரள வேட்டைக்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர், இதில் காயம்பட்ட 2 வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனசரக பகுதி தமிழகம்-கேரளம் மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. 

தமிழக வனப்பகுதியில் கேரள மாநிலத்தைச் சேரந்த வேட்டைக்காரர்கள் ஆயுதங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி கேரளத்துக்குள் எடுத்துச்செல்வது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனவர் இளவரசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் காஜாமைதீன், ஜெயக்குமார், மனோஜ்குமார், மகாதேவன் ஆகியோர் புதன்கிழமை இரவு தமிழகம்-கேரளம் மாநில எல்லை வனப்பகுதியான மச்சக்கல் காப்புக்காடு, சுரங்கனார் காப்புக்காடு இணைப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்த பகுதியில்  டார்ச் லைட் வெளிச்சம் தெரிந்ததால் அங்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத 7 நபர்கள் வேட்டையாடுவதற்காக தமிழக எல்லைப்பகுதியான செல்லார் கோவில் மெட்டு வனப்பகுதியில் துப்பாக்கி அரிவாள்களுடன் இருந்தனர்.

வனத்துறையினர் அவர்களைப் பார்த்து யார் நீங்கள், அனுமதியின்றி ஏன் வனப்பகுதியில் உள்ளீர்கள் என்று கேட்க, கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி சுடுவதற்கு முயற்சித்தனர்.

அதை வனக்காப்பாளர்  காஜாமைதீன் (41) தடுக்க முயன்றதுடன் துப்பாக்கியை கைப்பற்றி அதை மரத்தில் அடித்து உடைத்தார். இதனால் ஆத்திரமடைந்த வேட்டைக்காரர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு தமிழக வனத்துறையினரை தாக்கினர். வனத்துறையினரும் அவர்களை தடுத்து தாக்குதல் நடத்தினர், இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், காப்பாளர் காஜாமைதீனுக்கு இடது நெற்றி புருவத்திற்கு மேல் அரிவாள் வெட்டு விழுந்தது, வனவர் இளவரசனுக்கு இடது காலில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விட்டு கேரளத்து தப்பிச் சென்றனர்.

உடனே இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இந்த சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.

பின்னர் காயமடைந்த காஜாமைதீனை அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு அரிவாள் வெட்டு விழுந்த இடத்தில் தையல் போட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். காலில் காயம்பட்ட
வனவர் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமிழக, கேரள எல்லைப் வனப்பகுதியில் கேரளம் மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது, இவர்களில் வனவிலங்கு வேட்டைக்காரர்கள் தமிழக வனப்பகுதிக்குள் ஊடுருவி வேட்டையாடுவதும், அதிகாரிகளை தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. கருப்பசாமி தமிழக கேரளம் எல்லைப் பகுதியில், 63 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி கள்ளத்துப்பாக்கி, யானைத் தந்தம், மான் கொம்பு போன்றவைகளை கைப்பற்றி குமுளி, தேவிகுளத்தைச்சேர்ந்த 4 பேர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com