நலத்திட்டங்களை மக்களிடம் சிறப்பாக சேர்க்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

நலத்திட்டங்களை மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நலத்திட்டங்களை மக்களிடம் சிறப்பாக சேர்க்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

நலத்திட்டங்களை மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. மற்றும் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் அவர்கள் முன்னுரை வழங்கினார். இக்கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் தமிழரசு சந்தா, எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் அறிவிப்புகள், பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள், நினைவிடங்களைச் சிறப்பாகப் பராமரித்தல், நிர்வாகத்தில் மின்ஆளுமை பயன்பாட்டை அதிகரித்தல், மின்னணு விளம்பர (எல்.இ.டி) வாகனத்தின் பயன்பாடு மற்றும் கரோனா விழிப்புணர்வு குறித்து மாவட்டங்களில் மேற்கொண்ட பணிகள் போன்ற பொருண்மைகள் குறித்து ஆய்வு செய்தார். 

செய்தித்துறை அமைச்சர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூறியதாவது: "முதல்வரின் தலைமையில் செயல்படும் இந்த அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களைச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது பணியைத் திறமையாகச் செய்ய வேண்டும். மேலும், அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத்துறையால் வெளியிடப்படும் தமிழரசு இதழின் சந்தாக்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்களின் நலத்திட்ட உதவிகள் குறித்த விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தாமல் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைந்து கிடைத்திட, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை விரைந்து அனுப்பி வைக்கவும்
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள், நினைவுத் தூண்கள் போன்றவை இருக்கும் இடத்தினை எளிதில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவ்விடங்களுக்கு முன்பு 5 கிலோமீட்டர் மற்றும் 1 கிலோமீட்டர் தூரங்களில் அவ்விடங்கள் இருப்பது குறித்த அறிவிப்புப் பலகைகளை நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து பயன்பெறும் வகையில், தலைவர்களின் அரிய புகைப்படங்களை ஆவணக்காப்பகங்கள் மற்றும் அறிஞர்களிடம் பெற்று, மணிமண்டபங்களில் வைத்துக் காட்சிப்படுத்தலாம். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் நினைவு மண்டபங்கள் மற்றும் மணிமண்டபங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த கருத்துருக்களை விரைந்து தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

நாட்டுக்காக உழைத்த நல்லோர் மற்றும் தமிழறிஞர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள், அத்தலைவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்தாலோசித்து முன்கூட்டியே தெரிவித்து, அவ்விழாவினைக் கொண்டாடினால் அத்தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள், பொதுமக்களும் பாராட்டுவார்கள். நினைவு மண்டபங்கள்/மணிமண்டபங்கள் போன்றவற்றைப் பராமரிப்பதற்கு அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அரசு சாரா அமைப்புகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பினைப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம். நினைவு மண்டபம் மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டுத் திறப்பு விழா நடைபெறாமல் இருப்பவை குறித்து இயக்குநர் மற்றும் செயலாளர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். மேலும், கட்டி முடிவடையும் நிலையில் உள்ள நினைவு மண்டபங்கள், மணிமண்டபங்கள் போன்றவற்றை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் தலைமையிலான அரசின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை நமது துறையில் உள்ள எல்.இ.டி வாகனம் போன்ற நவீன உபகரணங்கள் மற்றும் நமது அனுபவத்தையும் பயன்படுத்தி, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். உங்களுக்குக் கிடைத்துள்ள அரசுப் பணி செய்யும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கும் அரசுக்கும் உறுதுணையாகச் செயல்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நிறைவாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநர்(செய்தி) தி.அம்பலவாணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்தப் பணி ஆய்வுக் கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com