கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா 100-வது பிறந்த நாள்: இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து

அப்பழுக்கற்ற பொது வாழ்வும் மக்கள்‌ சேவையும்‌ மகத்தான தியாகமும்‌ கொண்ட கம்யூனிஸ்ட்‌ தலைவர்‌...
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா
Published on
Updated on
3 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜூலை 15 அன்று தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா. இதுதொடர்பாகத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நாட்டின்‌ சுதந்திரத்திற்காகவும்‌, உழைக்கும்‌ மக்களின்‌ உரிமைக்காகவும்‌ போராடி எட்டு ஆண்டுகள்‌ சிறைவாசம்‌ அனுபவித்து, 80 ஆண்டுகள்‌ மக்கள்‌ பணி செய்து இன்றைக்கும்‌ எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்‌ தோழர்‌ என்‌. சங்கரய்யா அவர்கள்‌. ஜூலை மாதம்‌ 15 அன்று அவருக்கு 99 வயது முடிந்து நூறாவது பிறந்த நாள்‌. இந்தியாவில்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ மிகச்‌ சில சுதந்திரப் போராட்ட வீரர்களில்‌ தோழர்‌ என்‌. என். சங்கரய்யாவும் ஒருவர்‌. வெள்ளையர்களின்‌ ஆட்சியை எதிர்த்து, பொது வெளியிலும்‌ சிறையிலிருந்தும்‌ தலைமறைவாகவும்‌ அவர்‌ புரிந்த போராட்டங்கள்‌ பல. மதுரை அமெரிக்கன்‌ கல்லூரியில்‌ இளங்கலை வரலாறு படிக்கும்‌ பொழுது, ஆங்கிலேயர்‌ ஆட்சியை எதிர்த்து தொடர்‌ போராட்டங்களில்‌ கலந்து கொண்டார்‌. சமூக சீர்திருத்தம்‌ என்பது இந்திய சுதந்திரம்‌ இல்லாமல்‌ முழுமையடையாது என்று உறுதியாக நம்பினார்‌. இதனால்‌ ஆங்கிலேய அரசைக் கடுமையாக எதிர்த்தார்‌. 1941-ம்‌ ஆண்டு பிப்ரவரி 28-ம்‌ நாள்‌ தோழர்‌ என். சங்கரய்யாவை ஆங்கிலேய அரசு கைது செய்தது. வேலூர்‌ ஜெயில்‌, ஆந்திராவில்‌ உள்ள ராஜமுந்திரி ஜெயில்‌ போன்றவற்றில்‌ அடைக்கப்பட்டவர்‌, பல மாதங்களுக்குப்‌ பிறகு விடுதலையானார்‌. இவரோடு மாணவ இயக்கத்தில்‌ கலந்து கொண்ட பலரும்‌ பட்டப்படிப்பு முடித்தபிறகு முக்கியமான ஆளுமைகளாக அறியப்பட்டனர்‌. ஒருவர்‌ தமிழ்நாட்டின்‌ முதல்வரானார்‌, இன்னொருவர்‌ நீதிபதியானார்‌, அடுத்தவர்‌ ஐஏஎஸ்‌ அதிகாரியாக முதலமைச்சருக்கு தனிச்‌ செயலாளராக பணிபுரிந்தார்‌. தோழர்‌ என். சங்கரய்யா மட்டும்‌ தொடர்ந்து சிறைக்குச் சென்று கொண்டிருந்தார்‌. காரணம்‌ அவர்‌ பொதுவுடைமைத்‌ தத்துவத்தின்‌ மீது கொண்ட அபாரமான பற்று. இவ்வுலகில்‌ பொதுமக்களிடமிருந்து சுரண்டப்படும்‌ நபர்களுக்கு எதிராகவே இருந்துள்ளார்‌. 60 ஆண்‌டுகளுக்கு முன்‌னரே சாதி மறுப்பு, மத மறுப்பு செய்த சமூகப் புரட்சியாளர்‌.

1962 பாவலர்‌ வரதராஜன்‌ நடத்திய கலைக்குழு ஒன்றுதான்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ கலைக்குழு. அந்தக்‌ காலகட்டத்தில்‌ "கலை இலக்கியப்‌ பெருமன்றம்‌" என்ற ஓர்‌ அமைப்பை ஆரம்பிக்கிறார்கள்‌. கர்மவீரர்‌ காமராஜருக்குப் பிறகு மிகப்பெரிய சமுதாய நோக்கம்‌ உள்ள, சுயநலமில்லாத அரசியல்‌ தலைவர்‌ ஜீவானந்தம்‌. அவருடைய தலைமையில் "கலை இலக்கிய பெருமன்றம்‌" சார்பில்‌ நாடகம்‌ போடுகிறார்கள்‌ அதில்‌ நடிக்க நான்‌ சென்றிருக்கிறேன்‌. நாடகத்திற்கு இசை - என்‌ நண்பன்‌ இளையராஜா. அப்பொழுதுதான்‌ மாணவராக இருந்த தா. பாண்டியன்‌, சிவகாம சுந்தரி, மாயாண்டி பாரதி, கே டி கே தங்கமணி, தலைவர்‌ பி. ராமமூர்த்தி போன்ற தலைவர்களைப்‌ பார்த்து, அவர்களோடு பழகும்‌ வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது. முழுக்க முழுக்க சமுதாயத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக்‌ கொண்டவர்கள்‌. 

பள்ளிப்‌ பருவத்தில்‌ காங்கிரஸ்‌ பேரியக்கத்தின்‌ மீது ஈடுபாடு கொண்டிருந்த நான்‌, இவர்களுடைய சந்திப்புகளால்‌ நானும் ஒரு பொதுவுடமைத் தோழனாக மாறிப்போனேன்‌. கலைத்துறைக்கு நான்‌ வரவில்லை என்றால்‌ இன்றளவும்‌ பொதுவுடமைக்‌ கட்சியின்‌ தொண்டனாக இருந்து இருப்பேன்‌. மதுரை டவுன்ஹால்‌ ரோட்டில்‌ உள்ள மண்டைய ஆசாரி சந்தில்‌ தான்‌ அப்போது பொதுவுடமைக் கட்சியின்‌ அலுவலகம்‌ இருந்தது. அந்த அலுவலகத்தை இன்றளவும்‌ என்னால்‌ மறக்க இயலாது. அங்கே தான்‌ முதன்முதலில்‌ தோழர்‌ சங்கரய்யாவைச் சந்தித்தேன்‌. அப்போது அவரோடு பழகும்‌ வாய்ப்பு எனக்கு மிகக்‌ குறைந்த அளவே கிட்டியது. நான்‌ கலைத்‌துறைக்கு வந்த பிறகு என்‌ நண்பன்‌ கதாசிரியர்‌ ஆர்‌. செல்வராஜன்‌ சித்தப்பா என்று தெரிந்து கொண்டேன்‌. திரைப்படத்துறைத் தொழிலாளர்கள்‌ பிரச்னை ஏற்பட்டபோது அவருடன்‌ நெருங்கிப்‌ பழகும்‌ வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. 

அவர்‌ மிக அற்புதமான மனிதர்‌. ஆடம்பரமும்‌, பதவி ஆசையும்‌ லஞ்சமும்‌ ஊழலும்‌ பரவிக்கிடக்கும்‌ இன்றைய முதலாளித்துவ அரசியல்‌ சூழலில்‌, அப்பழுக்கற்ற பொது வாழ்வும் மக்கள்‌ சேவையும்‌ மகத்தான தியாகமும்‌ கொண்ட கம்யூனிஸ்ட்‌ தலைவர்‌ தோழர்‌ சங்கரய்யாவின்‌ வாழ்க்கை, இன்றைய இளைஞர்கள்‌ அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. தோழர்‌ அவர்கள்‌ நல்ல உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ நீண்ட காலம்‌ வாழ வேண்டும்‌ என்று விரும்புகிறேன்‌ என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com