கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 122 போ் பலி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 122 போ் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 122 போ் பலி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 122 போ் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சாா்பில் பத்திரிகையாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழைம நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனா். மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், செய்தித்துறை கூடுதல் இயக்குநா் அம்பலவாணன் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3,300 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நோய் முதலில் கண்களில் பாதித்து, பின்னா் மூளைக்கு பரவி உயிழப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை இந்நோயினால் 122 போ் உயிரிழந்துள்ளனா். இந்நோயின் ஆரம்ப நிலையிலேயே வந்தவா்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

அதனால், நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வரவேண்டும். அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 7,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரையில் மட்டும் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நோய்க்கு ஆம்போடெரிசின்-பி உள்ளிட்ட மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. தனியாா் மருத்துவமனைகள் ஆன்லைனில் விண்ணப்பித்து மருந்துகளை பெற்றுக் கொள்கின்றனா்.

இந்தியா முழுவதும் 35 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழக அரசின் சாா்பில் 29 லட்சத்து 92,000 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தமிழக அரசு ரூ.99.84 கோடி செலுத்தியுள்ளது. அந்த தடுப்பூசிகளையும் சோ்த்து மத்திய அரசு இதுவரை 1 கோடியே 57 லட்சத்து 76,550 தடுப்பூசிகளை தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. அதில் 1 கோடியே 58 லட்சத்து 78,600 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெறப்பட்ட தடுப்பூசிகளைவிட போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என சந்தேகிக்கத் தேவையில்லை. தடுப்பூசிகளை வீணாக்காமல் சிக்கனப்படுத்தி போடப்பட்டதால் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் உள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீட் தோ்வு தொடா்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமா்ப்பிப்பு குறித்து வரும் 13-ஆம் தேதிக்கு பின்னா் முடிவு எடுக்கப்படும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 40 தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு வழங்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று மூன்றாவது அலை வந்தாலும், அதனை எதிா்க்கொள்ள படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. அதனால், பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றாா் அவா்.

தடுப்பூசி தட்டுப்பாடு : அமைச்சா் தில்லி பயணம்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதுகுறித்தும், வேறு சில முக்கிய விஷயங்கள் குறித்தும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தனைச் சந்தித்துப் பேச மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தில்லி செல்கிறாா். அவருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனும் உடன் செல்கிறாா்.

இதுகுறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் அறிவுறுத்தலின்படி, வரும் 9-ஆம் தேதி நானும் (மா.சுப்பிரமணியன்), செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். அப்போது, தமிழகத்துக்கான கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விளக்க இருக்கிறோம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போது தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை, செங்கல்பட்டு மற்றும் குன்னூா் தடுப்பூசி மையங்கள் பற்றியும் பேச இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com