நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் விரைந்து வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்

மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் விரைந்து வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்
நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் விரைந்து வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன்
Published on
Updated on
2 min read


தருமபுரி: தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி விழாவுக்கு தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறியது: தமிழகத்தில் பெண்கள் கல்வியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருமண நிதி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்த இந்த திட்டத்தில் பின்னர் 2009-ல் ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இதனால் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து  நடைமுறைப்படுத்தப்பட்டது. 4 கிராம் தங்கம் வழங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் 8 கிராமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான நிதி உதவி அளிக்கப்படவில்லை. 

இதனால், கடந்த 3 ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை. இதனால் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் தமிழகத்தில் உதவித்தொகை பெறாமல் நிலுவையில் உள்ளது. திருமணம் செய்வோருக்கு உடனடியாக உதவிடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த உதவித்திட்டம் 3 ஆண்டுகளாக விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது வேதனை அளிக்கிறது. 

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் நிலுவை விண்ணப்பங்களின் மீது உடனடி நவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது திருமண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, 2 பெண் குழந்தைகள் பெற்ற குடும்பத்தில் உள்ள அக்குழந்தைகளின் நலன் காக்க வைப்புத் தொகை அவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் நிதியுதவி ஒதுக்காமல் 23 ஆயிரம் பயனாளிகளுக்கான இந்தத் தொகை முதிர்வடைந்த நிலையில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனையும் விரைந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இளம் வயது திருமணங்கள் செய்வதால் பெண்களின் கல்வி, எதிர்காலம், உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளம் வயது திருமணங்களை தடுக்க அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து இளம் வயது திருமணங்களை தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என அனைவர் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இளம் வயது திருமணங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தருமபுரி மாவட்டத்தில் ஜூன் வரை 35 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இடவசதியின்மை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மையம் அரசு கட்டடடத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்.

கரோனா பொது முடக்கத்தையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4000 நிவாரணம் தமிழக அரசு அறிவித்து, அத்தொகையை இரு தவணைகளாக வழங்கியது. இந்த நிதியுதவி தங்களுக்கும் கேட்டு திருநங்கைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அந்த நிவாரணத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதற்காக திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கும் திட்டமும் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தருமபுரி எம்எல்ஏக்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி),  கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே. சம்பத்குமார் (அரூர்), மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் நாகலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட, சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல, நல்லம்பள்ளி வட்டம், கோயிலூரில்  தனியார் காப்பகத்தில் செயல்படும் தொட்டில் குழந்தை மையத்தையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையை வழங்குகிறார் அமைச்சர் கீதாஜீவன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com