ஸ்டேன் சுவாமி இறப்பு: மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காததால் மரணமடைந்தார் எனக் கூறி மத்திய அரசைக் கண்டித்து மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி தலைமை அஞ்சலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
மன்னார்குடி தலைமை அஞ்சலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சமூக செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காததால் மரணமடைந்தார் எனக் கூறி இதற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் விரகாவலூரை சொந்த ஊராக கொண்டவர் ஸ்டேன் சுவாமி(84). நீண்ட காலத்திற்கு முன்பே ஜார்காண்ட் மாநிலத்திற்குச் சென்று கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்ததுடன் அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பிரச்னைகளுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்ததுடன் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார்.

ஸ்டேன் சுவாமி மீது உள்ள சில வழக்குகளுக்காக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் என்ஐஏ சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜார்க்கண்ட்டில் தலோஜாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்டேன் சுவாமிக்கு கரோனா பிந்தைய பாதிப்பு உள்ளிட்ட கூடுதல் நோய் தொற்றுகள் இருந்ததால் பாந்தாரவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமிக்கு உயர் சிகிச்சை அளிக்க வசதியாக அவரை பிணையில் விடுதலை செய்ய அனுமதி மறுத்ததுடன் அவரது உயிரைக் காப்பாற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட மத்திய அரசைக் கண்டித்தும் ஸ்டேன் சுவாமியின் முக்கிய கோரிக்கையான பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்க சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்திட வலியுறுத்தியும் மன்னார்குடி மேலராஜ வீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார்.

இதில் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, நகரக் குழு உறுப்பினர் கே.அகோரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com