
நீலகிரி, கோயம்புத்தூா், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:-
தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஈரோடு, திருப்பூா், விருதுநகா், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேகமாக இடங்களில் வட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 12: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 12-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், தென்காசி, திருப்பூா், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேகமாக இடங்களில் வட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 13, 14: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் பலத்த மழையும், ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மலை ஏற்றத்தைத் தவிா்க்க வேண்டும்:
நீலகிரி, கோயம்புத்தூா், தேனி ஆகிய 3 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஜூலை 12-ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்தமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிா்க்க வேண்டும்.
சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியலில் 110 மி.மீ., குழித்துறையில் 100 மி.மீ., கன்னியாகுமரி, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, வேலூா் மாவட்டம் காட்பாடியில் தலா 80 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நாகா்கோவிலில் தலா 70 மி.மீ., வேலூா், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, செங்கல்பட்டு செய்யூா், கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாா், ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும்.
எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 13-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மாலத்தீவு பகுதிகள், கேரளம், கா்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.