வீதிகளுக்கு தமிழ் மாதங்கள், ஆறுகள், மலர்கள் பெயர்: அசத்தும் ஆத்திப்பட்டி ஊராட்சி

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப் பட்டியில் வீதிகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்ப்பலகைகள் வைத்ததுடன் கூகுள் மேப்பிலும் ஏற்றி புதுமை படைத்த ஊராட்சித் தலைவரை மக்கள்  பாராட்டி வருகின்றனர். 
தெரு பெயர்ப்பலகை | ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி
தெரு பெயர்ப்பலகை | ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப் பட்டியில் வீதிகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்ப்பலகைகள் வைத்ததுடன் கூகுள் மேப்பிலும் ஏற்றி புதுமை படைத்த ஊராட்சித் தலைவரை மக்கள்  பாராட்டி வருகின்றனர். 

ஆத்திப்பட்டி ஊராட்சியானது அதிக பஞ்சாலைகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இங்கு ஆயிரக்கணக்கில் வீடுகளும், அதற்கேற்ப வீதிகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டன. அதே நேரத்தில் அந்த அளவிற்கு விரிவாக்கப் பகுதிகளில் வீதிகளுக்கு பெயர்கள் வைக்கப்படாததால் முகவரி தேடி தபால்கள் தருவதும், இணைய தள ஆர்டர்கள் மூலம் சரக்கு விநியோகம் செய்யும் முகவர்களும் முகவரி தேடுவதில் பெரும் குழப்பமும், உரிய நேரத்திற்கு சரக்கு விநியோகத்தில் தாமதமும் ஏற்பட்டு வந்தது.

இப்பிரச்னையைத் தீர்க்க ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி புதிய முயற்சியை மேற்கொண்டார். இதன்படி விரிவாக்கப் பகுதிகளில் அனைத்து வீதிகளுக்கும் மண்வாசனையுடன் அழகிய தமிழ்ப் பெயர்களை வைத்து, அவ்வீதிகளுக்கு பெயர்ப் பலகையும் வைத்தார்.

அத்துடன் ஒருபடி மேலே சென்று நவீன முறையில் அவ்வீதிகள், அங்குள்ள கடைகள், முக்கிய அரசு, தனியார் அலுவலகங்களின் முகவரி மற்றும் இருப்பிடங்களை கூகுள் மேப்பிலும் இணைத்து பதிவிட்டார். இதனால் தற்போது இப்பகுதிகளில்  முகவரி கண்டுபிடிப்பது எளிதாகி விட்டது.

இவ்விதம் நவீன முறையில் சிக்கலைத் தீர்த்துள்ளதுடன், அடிப்படை வசதிகளுக்கு தான் முக்கியத்துவம் அளித்து அவற்றை நிறைவேற்றி வரும் ஆத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரிக்கு நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர் அந்த கிராமத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com