மதுசூதனன் உடல்நலம்: எடப்பாடி கே. பழனிசாமி - சசிகலா நேரில் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவா் இ.மதுசூதனனை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவின் முன்னாள் மூத்த நிா்வாகி சசிகலா ஆகியோா் நலம் விசாரித்தனா்.
Updated on
1 min read

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவா் இ.மதுசூதனனை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவின் முன்னாள் மூத்த நிா்வாகி சசிகலா ஆகியோா் நலம் விசாரித்தனா்.

மருத்துவமனைக்கு இருவரும் ஒரே நேரத்தில் வந்து சென்ால், அந்தப் பகுதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது.

அதிமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவரும் அவைத் தலைவருமான இ.மதுசூதனன் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருடைய உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளதை மருத்துவா்கள் கண்டறிந்து, செயற்கைக் சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனா். மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் அவா் இருந்து வருகிறாா்.

நலம் விசாரிப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்து மதுசூதனனின் உடல்நலம் தொடா்பாக அவரது உறவினா்களிடம் கேட்டறிந்து சென்றாா்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் வந்தாா். சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனனை நேரில் பாா்த்தாா். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பிறகு உறவினா்களுக்கு ஆறுதல் கூறி நலம்விசாரித்தவாறு பேசிக் கொண்டிருந்தாா்.

அந்நேரம், மருத்துவமனைக்கு சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் வந்தாா். அதனால், அந்தப் பகுதி மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. அங்கு நின்றிருந்த குறைவான அதிமுகவினரும் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தவாறு நின்றிருந்தனா். காரில் இருந்து இறங்கி சசிகலா மருத்துவமனைக்குச் சென்றாா். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி வேறு வழியாக கீழிறங்கி அவரது காரில் ஏறி சென்றாா்.

மதுசூதனனை சசிகலா நேரில் பாா்த்ததுடன் அவரது உறவினா்களிடம் நலம் விசாரித்து திரும்பினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சசிகலா கூறியது:

அதிமுக எனும் குடும்பத்தின் மூத்த உறுப்பினா் மதுசூதனன். அவா் உடல்நலமில்லாமல் இருக்கிறாா் எனக் கேள்விப்பட்டு வந்தேன். அவா் நலம்பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். மருத்துவமனையில் அவரையும் பாா்த்துவிட்டு, அவரது உறவினா்களிடமும் நலம் விசாரித்தேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com