கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.42,690 பறிமுதல்

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி  வரை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 42690 -ஐ பறிமுதல் செய்தனர்
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
Published on
Updated on
2 min read



குன்னூர்: கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி  வரை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 42690 -ஐ பறிமுதல் செய்தனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உள்பட்ட தாசில்தாராக சீனிவாசன் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார், இந்த அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், சிட்டாவில் பெயர் சேர்த்தல், அனுபபாத்தியச்சான்று, நில உரிமைச் சான்று, நில உள்பிரிவு செய்தல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெற ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்காக வட்டாட்சியர் கையொப்பத்துடன் கூடிய அனுபவபாத்தியச் சான்று பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால்,  அனுபவபாத்தியச் சான்றிதழ் வழங்குவதற்காக அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும் நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. 

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தைக் கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு  நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சுபாஷிணி தலைமையில், ஆய்வாளர் கீதாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் உள்பட அதிகாரிகள் 8 பேர் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக தாசில்தார் அலுவலகத்தில் இரண்டு நுழைவு வாயில்களை மூடியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த மக்கள், இடைத்தரகர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மற்றும் காரில் அமர்ந்து இருந்தவர்கள் அனைவரையும் தாசில்தார் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் தாசில்தார் அலுவலக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரின் அறைகளில் இருந்த  கோப்புக்களை சோதனை செய்து, அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டு இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான கணக்கை எடுத்துக் கொண்டனர். இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.42,690-ஐ பறிமுதல் செய்தனர். நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்ற  இந்த திடீர் சோதனை காரணமாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com